சென்னையில் வாடகை வீட்டில் வசிப்போர் இடையே கடும் மோதல்.. 2 வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு பெண் கொலை
சென்னை: சென்னை திருவெற்றியூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், மாடியில் இருந்து தள்ளி விட்டு வசந்தி என்ற பெண்ணை கொலை செய்த மீனவர் குமார் கைது செய்யப்பட்டார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரத்தில் மீனவர் செய்த செயல், இரண்டு குடும்பத்தை தவிக்க வைத்துள்ளது. கோபத்தால் நிதானத்தை இழந்த அந்த மீனவரால், ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண்ணை கொலை செய்த அந்த மீனவரை போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவில் வாழ்ந்து வருபவர் புஷ்பகாந்தன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்திக்கு 40 வயதாகிறது. வசந்தி புஷ்பகாந்தன் தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் 2-வது மாடியில் வசிக்கிறார்கள்.
இவர்கள் வீட்டின் வாசல் முன்பு அட்டை பெட்டியில் செருப்புகளை அடுக்கி வைத்திருப்பார்களாம். சில நேரம் செருப்புகள் பக்கத்து வீட்டின் முன்பு இருக்கும் என கூறப்படுகிறது. செருப்பை ஒழுங்காக விடமாட்டீர்களா என்று கேட்டு வசந்திக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் குமார்(52) என்ற மீனவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஜூன் 2ம் தேதி வீட்டு வாசலில் வழக்கம் போல் அட்டை பெட்டியில் செருப்புகளை வசந்தி போட்டு வைத்துள்ளார். அப்போது செருப்பு அவர் வீட்டின் அருகில் இருந்ததாம். இதனால் கடும் எதிர்ப்பு தெரிவித்த குமார் திடீரென வசந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
அப்போது அங்கு புஷ்பகாந்தன் வந்தார். அவரது மனைவி வசந்தியுடன் இணைந்து குமாருடன் அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது குடிபோதையில் இருந்த குமார் ஆத்திரத்தில் புஷ்பகாந்தனின் மனைவி வசந்தி மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதலில் நிலைத்தடுமாறிய வசந்தி வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து வசந்தி ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனும் படுகாயம் அடைந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வசந்தி சிகிச்சை பலனின்றி ஞாயிறு அன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரா விசாரணையில் இறங்கினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வழக்கை கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தனர். வாடகை வீட்டுக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து பெண் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை திருவெற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications