சென்னை கீதா.. இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு கொடுத்த பிரண்ட் ரெக்கியூஸ்ட்.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் கடந்த ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராம் வலைதள கணக்கில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றுக்கு நட்பு கோரிக்கை கொடுத்துள்ளார். ஆனால் அந்த கணக்கு போலியாக தொடங்கப்பட்டது என்பது கீதாவுக்கு தெரியாது. இந்நிலையில் இளம்பெண் கீதாவிடம் தன்னை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் என பேசிய இளைஞர், 5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு வேலை பறிபோன பின்னர் அல்லது வேலை கிடைக்காத சூழலில் சில இளைஞர்கள் விரைவாக பணக்காரர் ஆக ஆசைப்பட்டு தவறான வழிகளில் இறங்குகிறார்கள். இவர்கள் பொதுவாக ஏமாற்றுவது, தன்னை போலவே பணக்காரன் ஆக ஆசைப்படுவோரையும், அரசு வேலைக்கு ஆசைப்படுவோரையும் தான். அரசு வேலையில் சேர லட்சங்களை கொட்ட தயாராக இருப்போரையும், பணம் டபுள் ஆக கிடைக்கும் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்வோரையும் குறிவைத்து ஏமாற்றுகிறார்கள்.

பணம் திரும்ப கிடைக்காது
பணத்தை வாங்கி செலவு செய்யும் மோசடி நபர்கள், அதன்பிறகு சிக்கினாலும், பணம் திரும்ப கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அதேநேரம் பண மோசடி, அரசு வேலை மோசடியில் ஈடுபடும் நபர்கள், கடைசியில் கம்பி எண்ணுகிறார்கள்.. அப்படியான சம்பவம் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் கணக்கு
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த 38 வயதாகும் கீதா, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்துள்ளார். அந்த கணக்கிற்கு கீதா நட்பு கோரிக்கை கொடுத்துள்ளார். அப்போது அந்த போலி கணக்கில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து இளைஞர் ஒருவர் பேசியுள்ளார். இளம்பெண் கீதாவிடம் தன்னை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் என அறிமுகம் ஆகியுள்ளார்.
5 லட்சம் பணம்
பேசும் போதே, தனக்கு நிறைய செல்வாக்கு உள்ளதால் கீதாவிற்கு அரசு வேலை வாங்கி தர முடியும் என்றும், அதற்கு செலவாகும் என கவர்ச்சிகரமாக பேசி நம்பிக்கை அளித்தாராம். இதனை அப்படியே உண்மை என்று நம்பிய கீதா கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பல தவணைகளாக அந்த இளைஞரின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சம் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.
மோசடி புகார்
இந்த நிலையில் இளம்பெண் கீதாவுக்கு அந்த இளைஞர் அரசு வேலை எதுவும் வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது போலி கணக்கு என்பதும் கீதாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம் பெண் கீதா புகார் அளித்தார். அதன்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வேலை போய்விட்டது
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை ஒட்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் ராகுல் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், ராகுல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் ராகுல் கடந்த ஜனவரி மாதம் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் வேலை பறிபோன நிலையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பணம் தேவைப்பட்டதால் பிரபலங்கள் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்களை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications