ஆர்கே சுரேசுக்கு தொடர்பு? ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! என்னென்ன தகவல் இருக்கு?
சென்னை: பாஜக ஓபிசி அணியின் துணை தலைவரான நடிகர் ஆர்கே சுரேசுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் ஆருத்ரா நிறுவனத்தின் பணமோசடி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதை உண்மை என்று நம்பிய மக்கள் அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நிறுவனத்தில் பணமுதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி வட்டி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின்படி முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் 13க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் கூட நிர்வாக இயக்குனர்கள் சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மேலும் இந்த வழக்கில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக ஓபிசி அணி துணை தலைவரான ஆர்கே சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும் வழக்கு தொடர்பாக 61 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல், 22 கார்கள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.96 கோடி டெபாசிட், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
இதற்கிடையே தான் ஆருத்ரா மோசடி வழக்கில் 3000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த குற்றப்பத்திரிகை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது ஆருத்ரா மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 360 புகார்களில் தொடர்புடைய ரூ.17.50 கோடி மோசடி தொடர்பான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதோடு இந்த வழக்கில் 3000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணங்களை விரைவில் தாக்கல் செய்வதாகவும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் உள்ள 1 லட்சத்து 9 ஆயிரம் புகார்கள் தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications