அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை!
சென்னை: "அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். எம்.எல்.ஏ தேர்தலிலோ, உள்ளாட்சி தேர்தலிலோ யார் நிற்பதாக இருந்தாலும் இதில் பயிற்சி பெற்றுத்தான் வருவார்கள்." என அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனி அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்த அண்ணாமலை, தற்போது புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நேரலையில் பேசினார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசுகையில், "ஆனந்தமாக, அன்போடு, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். தமிழ்நாட்டில் நடக்கும் அடுத்த தேர்தலில் நான் தொடங்கும் கட்சி போட்டியிடும். அதற்கு நாம் நிறைய தலைவர்களை, தொண்டர்களை தயார் செய்ய வேண்டும். உத்வேகத்தோடு, திறமை மிக்கவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரமாகும்.
நாம் இதை ஒரு இயக்கமாக ஆரம்பித்து, நிறைய மனிதர்களை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்களின் கொள்கைகளை உள்ளே வர வேண்டும். திறமையானவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்.
ஒரு முதலமைச்சர் தமிழகத்தை மாற்ற முடியுமா எனக் கேட்டால் கண்டிப்பாக முடியாது. கேபினட் அமைச்சர்களோ, 234 சட்டமன்ற உறுப்பினர்களோ, 39 எம்.பிக்களோ மாற்ற முடியுமா எனக் கேட்டால் கண்டிப்பாக முடியாது. அவர்களோடு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்போடு தூய்மையான அரசியலைக் கொண்டு வர வேண்டும். திறன் படைத்தவர்களை கொண்டு வர வேண்டும்.
எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு தரவேண்டும். எத்தனை முறை எம்.எல்.ஏவாக இருக்கவேண்டும், எத்தனை முறை எம்.பியாக இருக்கவேண்டும் என்ற வரம்பு முறை எனக்கு உட்பட எல்லோருக்கும் கொண்டுவரவேண்டும். நிரந்தர பதவியில் யாரும் இருக்கமுடியாது.
கோவையில் APJ Abdulkalam Centre for Ethics & Politics என்ற ஒரு மையத்தை தொடங்குகிறோம். வருகின்ற எல்லோருமே இதில் பயிற்சி பெற்றுத்தான் வருவார்கள். எம்.எல்.ஏ தேர்தலிலோ, உள்ளாட்சி தேர்தலிலோ யார் நிற்பதாக இருந்தாலும் இதில் பயிற்சி பெற்றுத்தான் வருவார்கள். சமூகத்தின் தேவை என்ன என்பதை அறிந்துகொண்டு தான் பதவிக்கு வருவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications