ஆக்சன், கட் சொல்லும் செங்க்ஸ்.. முழுசாய் கட்டுக்குள் வந்த விஜய்? படுத்தே விட்ட புஸ்ஸி ஆனந்த்! பரபர
சென்னை: எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜய்யை முதல்வராக்குவேன் என கூறியிருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையன் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம்.. அவரது ரூட்டில் பயணிப்பார் விஜய் என சொல்லி இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த புதிதிலேயே கட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை செங்கோட்டையனுக்கு தந்திருப்பதாக சொல்கின்றனர். இனி விஜயின் பயணத் திட்டத்தையும் அவர்தான் வகுப்பார் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
தமிழக வெற்றி கழகம் கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட போதும் தொண்டர்களை அரசியல் படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையாக முன்வைக்கப்பட்டது. இஷ்டத்துக்கு வருவது, போவது என விஜய் அரசியல் செய்து வந்த நிலையில் மிகக் கடுமையான விமர்சனங்கள் விஜய் மீதும், தமிழக வெற்றிக்கழகத்தின் மீதும் முன்வைக்கப்பட்டது.
ஆனந்த், சிடிஆர் நிர்மல், ஆதவ் என ஒரு சிலர் இருந்தாலும் ஒரு கட்டுக்கோப்பான கட்சியை வழிநடத்திச் செல்லும் வகையில் தலைவர்கள் இல்லை என்பது தமிழக வெற்றிக்கழகத்தின் மீதான விமர்சனம்.

விஜய் அரசியல்
அந்த விமர்சனத்தை போக்கும் வகையில் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் தான் அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான செங்கோட்டையன். 25 வயதில் எம்ஜிஆர் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம் என பல முதல்வர்களுடன் பணியாற்றி இருக்கிறார். கடைசியாக எடப்பாடி பழனிச்சாமி வரை.. ஆனால் தனக்கு வரவிருந்த முதல்வர் வாய்ப்பை எடப்பாடிக்கு கொடுத்த நிலையில் பின் நாட்களில் அவர் மீதான அதிருப்தியின் காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விஜயின் பயணத் திட்டத்தை செங்கோட்டையன் தான் வகுப்பார் என சொல்லப்படுகிறது. மிகவும் சீனியர் என்ற முறையில் செங்கோட்டையனை மதித்து நடக்க வேண்டும் என இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டார். வேறு வழியின்றி அதை கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.
செங்கோட்டையன்
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயை முதல்வராக பாடுபடுவேன்.. அவரை முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனது ரத்தத்தில் கலந்துள்ளது என உணர்ச்சிபூர்வமாக பேசினார். அதற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த் பேசியதுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த காலங்களில் தன்னைத் தவிர விஜயை யாரும் சந்தித்து விடக்கூடாது என தீர்மானமாக ஆனந்த் இருந்த நிலையில், அதுவே அவர் மீதான விமர்சனமாகவும் முன்வைக்கப்பட்டது.
புஸ்ஸி ஆனந்த்
ஆனால் செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளி இருந்தார் ஆனந்த். செங்கோட்டையன் நம்மை நம்பி வந்திருக்கிறார்.. அவருக்கு அனைத்து உரிமையும் கொடுக்கப்படும்.. அவரை சார்ந்தவர்களுக்கும் அனைத்தும் மரியாதையும் கொடுக்கப்படும். இனி அவள் சொல்வதை நாங்கள் கேட்டு நடப்போம். அவர் போட்டுக் கொடுக்கும் ரூட்டில் தான் விஜய் பயணிப்பார் என பேசி இருந்தார்.
விஜய் பயண திட்டம்
இந்த நிலையில் விஜயின் அடுத்தகட்ட பயணங்களை திட்டமிடும் முழு பொறுப்பும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே செங்கோட்டையனை ஆனந்த் முழுமையாக ஏற்றுக் கொண்டதாக சொல்கின்றனர். அதாவது வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்னதாக மாவட்ட ரீதியான பயணங்களை முடிக்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் அசைன்மென்ட். அதற்கான பயணத்திட்டங்களை வகுத்து வருகிறார்.
சிறுபான்மையினர் ஆதரவு
குறிப்பாக கொங்கு தென்மாவட்டங்களில் விஜய்க்கு செல்வாக்கு சற்று சரிவாக இருக்கும் நிலையில் அங்கு அடுத்தடுத்து விஜயின் சுற்றுப்பயணங்கள் இருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு சிறுபான்மையினர் ஆதரவு இருக்கும் நிலையில் திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையின மக்களை அடுத்தடுத்து சந்திக்கும் வகையில் பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
செங்கோட்டையன் - விஜய்
இரண்டாம் கட்டமாக சென்னை எண்ணூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர் கிராமங்களில் விஜய் மக்களை சந்திக்க இருக்கிறார். மேலும், சிறுபான்மையினர், இளைஞர்கள், பெண்கள், மீனவர், நெசவாளர், விவசாயிகள் ஆகிய தரப்பினரை குறித்து விஜயின் பயணம் இருக்கும். இதற்கான முழு பொறுப்பும் செங்கோட்டையனிடம் வழங்கப்பட்டிருக்கிறது. காலை வீட்டிலிருந்து வெளியேறுவது தொடங்கி மீண்டும் வீட்டுக்கு செல்வது தவிர்த்து இடைப்பட்ட அனைத்து நேரங்களிலும் செங்கோட்டையன் 'ஆக்சன் - கட்' சொல்வார் எனவும், அதையே விஜய் செய்வார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications