ஓபிஎஸ் மகன்னு பார்க்காதீங்க.. ரவீந்திரநாத் மீதான பாலியல் புகாரில் ஆக்ஷன் எடுக்கணும்: ஜெயக்குமார்
சென்னை: பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மீது பெண் அளித்த புகாரில், போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரவீந்திரநாத் மீது பாலியல் தொல்லை புகார்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு விவாகரத்து ஆனதை அறிந்த ரவீந்திரநாத் கடந்த அக்டோபர் முதல் தனது நண்பர் முருகன் என்பவர் மூலமாக தனக்கு தொந்தரவு அளித்து வருவதாக புகார் கூறினார்.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக மிக அநாகரீகமான வார்த்தைகளில் தன்னை வர்ணிப்பதாகவும் கூறினார். அவரது விருப்பத்திற்கும் இணங்காததால் தன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும், ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் கோரிக்கை: இந்நிலையில், இன்று சென்னையில் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஜெயக்குமாரிடம், ஓபி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டக் கூடாது" எனத் தெரிவித்தார்.

அந்த சூழல் வரட்டும், பார்க்கலாம்: மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அந்த சூழல் வரும்போது அது குறித்து அதிமுக ஆலோசித்து முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார். மேலும் அதிமுக கொடியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications