பண மோசடி புகார்.. காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த ஆர்யா.. வெளியான பரபர தகவல்!
சென்னை: பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்யாவின் பெயர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது நீக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரகசியமாக வந்து போலீசாரை சந்தித்து சென்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா, இப்போது ஜெர்மனி நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், சுமார் ரூ 70 லட்சம் வரை பண மோசடி செய்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

கமிஷனர் அலுவலகத்தில் ஆர்யா
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஆர்யா, தனது தரப்பு விளக்கத்தை போலீசாரிடம் அளித்திருந்தார். அந்த ஜெர்மனி பெண்ணை யாரென்றே தெரியாது என ஆர்யா போலீசாரிடம் கூறியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது திடீர் திருப்பமாக ஆர்யா போல நடித்து பண மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் ஹூசைனி பையாக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திடீர் திருப்பம்
மேலும், ஆர்யாவுக்கும் இந்த பண மோசடி குற்றச்சாட்டிற்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் போலீசார் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது ஜெர்மனி பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதில் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவையும் அவரது தாயார் ஜமீலாவையும் கைது செய்து விசாரிக்கும்படி வாதத்தை முன் வைத்தார். இது தொடர்பா பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜாமீன் மனு மீதான உத்தரவை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆர்யா ஏன் புகார் அளிக்கவில்லை
இதில் ஆர்யாவுக்குத் தொடர்பில்லை என்றால் தன்னை போல நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது ஆர்யா ஏன் புகார் அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன், போலீசாரின் எஃப்ஐஆரில் பதிவின்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளி ஆர்யாவின் தாயார் ஜமீலா ஆகியோரது பெயர்களே இடம் பெற்றுள்ளதாக கூறியிருந்தார்.

போலீசார் விளக்கம்
அதேநேரம் போலீசார் பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஆர்யா மற்றும் அவரது தாயார் ஜமீலா ஆகியோரது பெயர்கள் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டதாகவும் விசாரணையில் அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்ததால் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.

ஆர்யாவின் திடீர் விசிட்
இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஆர்யா, போலீசாருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. விஐபி நுழைவாயில் வழியே தனது வழக்கறிஞர் காரில் ஆர்யா வந்து சென்றதாகவும் காவல் ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் கிளம்பும்போது, செய்தியாளர்கள் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆர்யாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர் யாருக்கும் எந்த பதிலையும் அளிக்காமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார். குற்றப்பத்திரிக்கையில் ஆர்யா பெயர் நீக்கப்படும் என போலீசார் கூறிய நிலையில், அவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரகசியமாக வந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications