100 பவுன் நகை போடுறேன்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் வழங்கி நடிகர் மன்சூர் அலிகான் வாக்குறுதி
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை கொடுத்துள்ளார். அதோடு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் திருமணத்துக்கு 100 பவுன் நகை போடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்குறுதி அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
பஹ்ரைனில் 3வது ஆசிய இளையோர் போட்டி நடந்தது. இதில் கபடி இறுதி போட்டியில் ஈரான் அணியை 75-21 என்ற வகையில் இந்திய அணி வென்றது. இதில் இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா இடம்பெற்றிருந்தார். அவர் துணை கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் அவர் சிறப்பாக விளையாடி நம் அணியின் வெற்றிக்கு உதவினார். வீராங்கனைகள் அனைவருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு தமிழக அரசு ரூ 25 லட்சம் ஊக்கதொகையாக வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம், ‛பைசன்' படக்குழுவினர் சார்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கண்ணகி நகர் கார்த்திகாவின் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்து ரூ.10 லட்சம் வழங்கினார். இதில் கார்த்திகாவிற்கு ரூ.5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான், கண்ணகி நகர் கார்த்திகாவை சந்தித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் சால்வை அணிவித்து கார்த்திகாவை பாராட்டினார். அதன்பிறகு மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛
பெண்களுக்கு உடல்நலன் ரொம்ப முக்கியம். இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். ஏதாவது சின்ன பாதிப்பு இருந்தால் ரூ.1 கோடி, ரூ.10 லட்சம் என்று நஷ்டஈடு கிடைக்கும் வகையில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஸ்பான்சர்ஷிப் செய்ய வேண்டும். வீரர்களுக்கு அது ரொம்ப முக்கியம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் உடன் நான் நடித்துள்ளேன். இதனை ஒரு கருணை மனுவாக எடுத்து கொண்டு அவர்கள் செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள் மேலே எழுந்து வரும்போது அவர்களுக்கு உதவ வேண்டும். இது இவர்களுக்கான வெற்றி இல்லை. இனி தான் அவர்கள் சாதிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்குமான கபடி கட்டமைப்பை கட்டமைக்க வேண்டும். அதில் அரசியலேயே இருக்க கூடாது. மல்யுத்த வீராங்கனை வினோத் போகத் தங்கத்தை பறித்தார். அப்படி அரசியல் இருக்கிறது. சிரித்தால் கூட உடல் எடை அதிகரிக்கும். அவர் தங்கம் பெற நம் நாடே உதவவில்லை.
நீங்கள் ஒலிம்பிக்கிலும் ஜொலிக்க வேண்டும். இது 2025 தான். அடுத்த ஒலிம்பிக்கில் கபடியை கொண்டு வர வேண்டும். கொண்டு வருவோம். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். உன் கல்யாணத்தில் (கார்த்திகா) 100 பவுன் நகை போடுறேன். நீ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வர வேண்டும். பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும். அவர் இளம் வித்தகராக இருக்கிறார். வாழ்த்துகள்.. வாழ்த்துகள். கார்த்திகாவிற்கு ரூ.10 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.'' என்றார்.
மேலும் மன்சூர் அலிகான், ‛‛நெல் மூடைகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைத்து விடுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் தேவையான இடங்களில் பெரிய குடோன்கள் கட்டப்பட வேண்டும். ஏனென்றால் ‛வாடி பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரை வாழ்த்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது. வள்ளலார் இதை பார்த்தால் ரொம்ப வாடிப்போவார்'' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications