என்னை திட்டுறாங்கனா நான் ஜெயிச்சிட்டேன்.. 'ஆதி குணசேகரன்’ தான் ஹீரோ.. மாரிமுத்து பகிர்ந்த விஷயம்!
சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மாரிமுத்து, எல்லோராலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நேரத்தில் திடீரென காலமானார். ஆதி குணசேகரன் கேரக்டர் பற்றி மாரிமுத்து பேசியிருந்த விஷயத்தைப் பார்ப்போம்..
தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல். திருச்செல்வன் இயக்கி வரும் இந்த சீரியல் டிஆர்பி-யிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த சீரியல் இந்த அளவு வரவேற்பை பெற்று வருவதற்கு முக்கிய காரணம் அதில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து தான். சீரியலில் அவர் பேசும் வசனங்கள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றன.

சினிமாவில் உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களில் வெளிப்பட்டிருந்தாலும், 'எதிர் நீச்சல்' சீரியல் மூலமாக உலக அளவில் ஃபேமஸ் ஆகியிருந்தார் மாரிமுத்து. குறிப்பாக இவர் அடிக்கடி உச்சரிக்கும் "இந்தாம்மா ஏய்" என்ற வசனம் பிரபலமானது. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரிமுத்து மறைவு திரையுலகினர், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், "காதலில் தோற்றுப் போனால், வாழ்க்கையின் இறுதி காலம் இல்லை. அதற்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கிறது. காதல் தோல்வியடைந்துவிட்டது, காதலித்த பெண் தூக்கி எறிந்துவிட்டாள் என்று நினைக்கக்கூடாது. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தும்.
எனக்கு பிடித்த வாசகம், தடைக்கல்லை படிக்கல்லாக்கு என்பதாகும். காதல் தோல்வி என்பதெல்லாம் எண்டே கிடையாது. வாழ்க்கையில் நிறைய இன்பம், சந்தோசம் இருக்கிறது. அதை அனுபவிக்க வேண்டும். தோல்வி அடைந்தால் சரக்கு அடிக்கிறது, வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது தவறு. உன் முன்னாடி முன்னேறிக் காட்டுகிறேன் என வளர வேண்டும்.
நான் வீட்டில் ரொம்ப கூலான ஆள். எதிர்நீச்சலின் ஆதி குணசேகரன் ஒரு கதாபாத்திரம். வீட்டில் நான் ரொம்ப கூலாக, லவ்லியா தான் இருப்பேன். மாரிமுத்து வீட்டில் யாரையும் அதட்டிப் பேசமாட்டான். ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தை கெட்டவனாக தான் வடிவமைத்தோம். அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் திட்டுகிறார்கள் என்றால், அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பித்து 200 எபிசோட் வரை தான் என்னை எல்லோரும் திட்டினார்கள். இப்போது என்னை ஹீரோ ஆக்கிவிட்டார்கள். அது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிக்கிறார்கள். திட்டுவது நல்லது. திட்டினால் தான் அந்த கதாபாத்திரம் சரி. ஆதி குணசேகரன் ஜெயித்து விட்டான்" எனப் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications