கவுண்டமணி பட ஷூட்டிங்குக்கு இன்று வர இருந்தார் மாரிமுத்து.. அதற்குள் இப்படி இடி.. கலங்கிய வையாபுரி!
சென்னை: நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை கவுண்டமணி படத்தின் ஷூட்டிங்கிற்கு மாரிமுத்து செல்ல வேண்டி இருந்த நிலையில், இப்படி நடந்துவிட்டது என நடிகர் வையாபுரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய நிலையில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. மாரிமுத்துவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலில் வரும் காட்சிகள், வசனங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதுண்டு. அதற்கு மிக முக்கிய காரணம் இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் நடித்திருந்த மாரிமுத்து. இந்த சீரியலில் மாரிமுத்து பேசிய வசனங்கள் மீம் டெம்ப்ளேட்களாக ட்ரெண்டாகின. தனது மனதில் பட்ட கருத்துகளை எந்தவித ஒளிவு மறைவுமின்றி பேட்டிகளில் துணிச்சலாக முன்வைத்து வந்தார் மாரிமுத்து.
ஏற்கனவே, இயக்குநர், நடிகர் என சினிமாவில் பிரபலம் ஆகியிருந்தாலும் 'எதிர்நீச்சல்' சீரியலில் அவர் பெற்ற புகழுக்குப் பிறகு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தன. அண்மையில் வெளியான ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார் மாரிமுத்து. மேலும், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாக கூறப்படுகிறது. இன்று 'எதிர்நீச்சல்' டப்பிங் முடித்த பிறகு கூட ஒரு படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருந்தார் மாரிமுத்து. இந்நிலையில், அவரது மறைவு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்த நகைச்சுவை நடிகர் வையாபுரி கூறுகையில், "மாரிமுத்து அண்ணன் நல்ல நடிகர், நல்ல இயக்குநர். நல்ல சிந்தனையாளர். அவர் நடிக்கும் கேரக்டர்கள் சீரியசாக இருந்தாலும் கூட அவர் உண்மையில் மிகப்பெரிய நகைச்சுவையாளர். முதலில் படம் இயக்கினார், பிறகு நடித்தார், இயக்கத்தில் சின்ன தடை இருந்தாலும் நடிப்பில் சிறப்பாக இருந்தார்.
அவரே கொஞ்சம் போராட்ட காலம், இப்போதுதான் நல்லா போகுது எனச் சொன்னார். ஆனால் திடீரென்று இப்படி ஆகிவிட்டது. எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாரிமுத்து அண்ணனின் மறைவு. அவரும் நானும் ஒரு படத்தில் இன்று காலை 8 மணிக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தோம்.
கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாங்கள் இருவரும் நடிக்க இருந்தோம். 8 மணிக்கு போன் பண்ணும்போது, டப்பிங்கில் இருக்கிறேன். முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறேன் எனக் கூறியுள்ளார். அதன்பிறகு போன் அடிக்கும்போது போன் எடுக்கவில்லை. அதன்பிறகு விவரம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்குப் போனோம். இது உண்மையாக இருக்காது என்றே நினைத்தோம்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications