சாத்தான்குளம் மரணம்.. ஜெயராஜ் குடும்பத்துக்கு ரஜினி போன் செய்து இரங்கல் தெரிவித்தாரா?
சென்னை: போலீசார் தாக்குதலில் சாத்தான்குளம் வர்த்தகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லாக்டவுனின் போது கடையை திறந்தார்கள் என்பதற்காக போலீசாரால் லாக் அப்பில் மிக கொடூரமாக தாக்கப்பட்டனர் ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸும். இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இருவரது மரணமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இருவரின் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அரசு அளித்த உறுதி மொழி, நடவடிக்கைகளால் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
ஆனாலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள். ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தமிழக அரசு, அதிமுக மற்றும் திமுக நிதி உதவி வழங்கின.

சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறலுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா நேற்று இரவு வெளியிட்டிருந்த அறிக்கையில் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தார்.
அதேநேரத்தில் ரஜினிகாந்த் இந்த போலீசாரின் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயராஜின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த் என்று அவரது நெருங்கிய நண்பரான காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலோ, ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பிலோ இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications