பாலமா இருக்கனும்.. ப்ராப்ளமா இருக்க கூடாது! விஜயை கட்டுப்படுத்தும் புஸ்ஸி.. வேதனையோடு பேசிய பிரபலம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கிறது. அடுத்ததாக நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தாண்டி யாரும் விஜயை பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் எனவும், தொண்டர்களுக்கும் தலைவருக்கும் பொதுச் செயலாளர் பாலமாக இருக்க வேண்டும், ஆனால் பிராப்ளமாக இருக்கக் கூடாது என வெளிப்படையாக விமர்சித்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய், கள அரசியலுக்கு ஆயத்தமாகி வருகின்றார். தற்போது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.

இந்த நிலையில் ஒவ்வொரு முறை விஜய் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டதும், பதவி கிடைக்காதவர்கள் தலைமை குறித்து வெளியில் இருந்து நிர்வாகிகள் பேட்டி கொடுப்பது அல்லது வீடியோ மூலம் பேட்டி கொடுப்பது வழக்கம் ஆகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தே அவரது ஆதரவாளர்களாக இருந்த பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக நடிகர் தாடி பாலாஜி, நடிகர் சௌந்தரராஜன் ஆகியோர் விஜயின் மாநாட்டுக்கு முன்பிருந்தே அவரது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். நடிகர் தாடி பாலாஜி ஆரம்பத்தில் விஜய் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இடையில் விஜய் டிவி பக்கம் ஒதுங்கி இருந்த அவர் குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இதற்கிடையே தமிழக வெற்றி கழக பணிகளில் தீவிரம் காட்டிய அவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகநலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கொடியேற்று விழா என பிசியாக இருந்தார். கட்சிக் கொடி அறிமுக விழாவிலும், கட்சி மாநாட்டிலும் அவருக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விஜய் மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது மார்பில் விஜயின் உருவத்தை டாட்டு குத்திக் கொண்டார். ஆனால் தாடி பாலாஜிக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. அதை குறிப்பிட்டு தாடி பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீம் ஒன்றை தனது வாட்ஸாப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தது அப்போது பேசு பொருளானது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி. இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"தன்னை தாண்டி யாரும் விஜய்யை பார்த்து விடக் கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் தெளிவாக இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் விஜயுடன் தொடக்கத்தில் இருந்தே பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தொண்டனுக்கும் தலைவனுக்கும் பாலமாக அவர் இருக்க வேண்டும். ப்ராப்ளமாக இருக்கக் கூடாது. ஒரு தொண்டன் தனது மனதில் இருக்கும் குறைகளை தலைவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சியின் அடிப்படை நிலைமை என்ன தொண்டர்களின் நிலை என்ன என்பது தலைவருக்கு தெரியும்.
ஆனால் புஸ்ஸி ஆனந்த் விஜயை சந்திக்க விடுவதில்லை. இந்த வயதிலும் ஆனந்த் நன்றாக வேலை பார்க்கிறார். அது பிரச்சனை இல்லை. ஆனால் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் ஆனந்தின் பார்வை விஜய் மேல் தான் இருக்கிறது. அவரை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். எனக்கு தெரிந்து விஜய்க்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் கூட கட்சிக்காக அதிக அளவில் உழைத்திருக்கிறார்கள். மனைவியின் நகைகளை அடகு வைத்து செலவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அது விஜய்க்கு தெரிவதில்லை.
எனக்குத் தெரிந்து நரேஷ் என்பவர் கட்சிக்காக நிறைய உழைத்தார். சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரது குடும்பத்தினரை கூட விஜயை சந்திக்க வைக்கவில்லை. நானும் விஜய்காகத்தான் கட்சிக்கு வந்தேன். எனக்கு பதவி கிடைக்கும் என்பதற்காக வரவில்லை. ஆனால் நான் வந்தால் நான் தான் ஃபோகஸ் ஆவேன். தன்னால் ஃபோகஸ் ஆக முடியாது. என்பதால் தான் என்னையே ஓரம் கட்டினார்கள். என்னுடைய உழைப்பினால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். தலைவருக்கு பத்தாயிரம் பேரை தெரியும் என்றால் என்னை ஒரு நூறு பேருக்கு ஆவது தெரியுமல்லவா" என கூறியுள்ளார். அவரது பேச்சு கட்சியிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications