தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமனம்
சென்னை: தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைநகராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காகவும், தொன்மையும், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளைபோற்றிப் பாதுகாக்கவும், தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது உருவாக்கப்பட்டது. இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பெற்றது.
தமிழக அரசால் வழங்கப்படும் நிதி உதவிகள் மூலம் கலைத் திட்டப்பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகின்றது. கலைமாமணி விருது வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல், மாநிலங்களிடையே கலைக் குழுக்களைப் பரிமாற்றம் செய்தல், இளம் கலைஞர்கள் ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது, கிராமியகலைஞர்கள்/கலைக்குழுக்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்கிட நிதியுதவி வழங்குதல், சிறந்த நாடகங்கள் உருவாக்கிட நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல், சிறந்த நாட்டிய நாடகம் உருவாக்கிட நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செய்து வருகிறது.
மேலும் அரும்பெரும் கலை நூல்களை வெளியிட நிதியுதவி வழங்குதல், தமிழகக் கலைச் செல்வங்களை ஆவணமாக்குதல், கலை விழாக்கள் நடத்துதல், புகழ்மிக்க கலைஞர்களுக்கு பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிலான விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல் ஆகியவற்றையும் இந்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செய்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராக இசையமைப்பாளர் தேவா 2 முறை பதவி வகித்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திமுகவின் மூத்த கலைஞர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் பதவியையும் சந்திரசேகர் வகிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார் வாகை சந்திரசேகர். 1999-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு வேளச்சேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவில் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார் வாகை சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications