அதிமுக- பாஜக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி! 2026ல் திமுக- தவெக இடையேதான் போட்டி- விஜய் பரபரப்பு
சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்பந்த கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறிய போவது உறுதி!

குறைந்தபட்ச அரசியல் அறத்தைக் கூட தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தின் ஊற்றுக் கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால் ஏற்கெனவே சொன்னது போல உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே!
ஊழல் நடந்த மாநிலங்கள்
ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழகத்தில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதல்வரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பாஜக- திமுக மறைமுகக் கூட்டு என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளன.
மறைமுக கூட்டாளி
திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில் தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சரியமில்லை. பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே ஏற்கெனவே 3 முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.
நாடகம்
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் நாங்கள்தான் திமுகவிற்கு எதிரான ஒரே அணி என்று பாஜகவும் தாங்கள்தான் பாஜகவிற்கு எதிரான அணி என திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழக மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர். இனி திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு நாடகங்களை நடத்த இயலாது.
ஏமாற்றி வந்தவர்கள் யார்
தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.
தீர்க்கமான முடிவு
அதை நிரூபிக்கும் விதமாக தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர். நாம் ஏற்கெனவே நம்முடைய பொதுக் குழுவில் அறிவித்தது போலவே 2025 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாக கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவிற்கும் இடையேதான்.
பொதுக் குழு
மக்களுக்கு எதிரான நம்முடைய பொதுக் குழுவில் தீய சக்திகளழை எதிர்த்து நின்று களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
சமூகநீதிக் கொள்கை
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும் மதசார்ப்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகிற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக!
உண்மையான மாற்றம்
தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞரக்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள். எனவே பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுகவின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி விரட்டியடிதச்து தூக்கி எறிய போவது உறுதி. அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். வாகை சூடுவோம் என விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications