தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா.. 30 நிமிடங்கள் பேசும் விஜய்.. ஒரு நபருக்கான சாப்பாடு செலவு ரூ.3 ஆயிரம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டுக்காக மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் சுமார் 30 நிமிடங்கள் வரை எழுச்சியுரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடைபெற்றது. இதன்பின் பரந்தூர் சென்று விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தவெகவின் 2ஆம் ஆண்டு விழா கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில், அரசியல் பணிகளை தீவிரப்படுத்த விஜய் ஆலோசித்து வருகிறார். அதற்கான முதல் கூட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது. தவெகவின் 2ஆம் ஆண்டு விழா கூட்டத்துடன் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தையும் விஜய் நடத்தவுள்ளார். இதற்காக கடந்த சில வாரங்களாக இடத்தேர்வு பணிகள் நடந்து வந்தது.
இறுதியாக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட்ஸ் ரெசார்டில் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த ரெசார்டில் சுமார் 2,500 பேர் அமரும் வகையில் உள்ள அரங்கில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்படவுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேருக்கு தவெக தலைமையிடம் இருந்து அழைப்பு சென்றிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ரெசார்டில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தவெக சார்பாக நிர்வாகிகளுக்கு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெசார்ட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். அதேபோல் மாமல்லபுரம் அருகே நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய்-ஐ வரவேற்று கட் அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் விஜய் சுமார் அரை மணி நேரம் வரை உரையாற்றவுள்ளார். இந்த கூட்டத்தில் மொத்தமாக 3,000 பேருக்கு ரெசார்ட் நிர்வாகத்திடம் சாப்பாடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ரெசார்டில் ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு கட்டணமாக ரூ.2,300 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் ரூ.2,300 உடன் வரியும் கட்ட வேண்டும். இதனால் ஒரு நபருக்கான சாப்பாட்டுக்கு மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் செலவு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடக்கவுள்ளதால், நாளை மறுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க வருவோருக்கு நிகராக விஜய்-ஐ பார்க்கவும் சிலர் வரக்கூடும் என்று கருதப்படுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை ரெசார்ட் நிர்வாகம் மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications