நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாடு.. திருச்சி? மதுரை? நெல்லை? பரபரக்கும் தென் தமிழகம்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியின் அறிவிப்பு மற்றும் முதல் மாநில மாநாடு திருச்சி, மதுரை அல்லது நெல்லை ஆகிய 3 நகரங்களில் ஒன்றில் நடைபெறக் கூடும் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது என்பது இயல்பான ஒன்றுதான். அண்மைகாலங்களில் நடிகர் விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் வரை முன்னேறினார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார். தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது; அதை நிரப்பப் போகிறேன் என்றார். ஆனால் கட்சி தொடங்கும் முன்னரே கட்சியை கலைத்த சரித்திரத்துக்கு சொந்தக்காரராகிப் போனார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வரும் விஜய்: தற்போது நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்குவதில் தீவிரமாக உள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான இடங்களில் வென்றதைத் தொடர்ந்தே அரசியலுக்குள் இறங்குவதற்கு விஜய் முடிவெடுத்தார் என சொல்லப்படுகிறது. தற்போது தமது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளையும் விஜய் முடுக்கி விட்டுள்ளார்.
கட்சி பெயர் என்னவாம்?: நடிகர் விஜய் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் கட்சி கொடி, கொள்கை முழக்கம் ஆகியவையும் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாம். நடிகர் விஜய்-க்கு ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வில் இருக்கும் அரசியல் கட்சிகளின் மாஜி தலைவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எங்கே மாநாடு?: இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடத்தப் போகும் முதல் மாநில மாநாடு- அதாவது கட்சி அறிவிப்பு மாநாடு எங்கே நடக்கும் என்பது விவாதமாகி வருகிறது. லியோ பட இசை வெளியீட்டு விழாவை திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தாராம் விஜய். திருச்சி, மதுரை, சென்னை ஆகிய 3 இடங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த விஜய் முயற்சி நிறைவேறவில்லை. கடந்த காலங்களில் நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் விஜய் மாநாடு நடத்த வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்தது.
மதுரை?: மதுரையைப் பொறுத்தவரை எம்ஜிஆர், விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி என பல்வேறு தலைவர்கள் அரசியல் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திய மண் என்பதால் மதுரை முதல் சாய்ஸாக இருக்கிறதாம். திருச்சி என்றாலே திருப்புமுனை என்பது அரசியல் வரலாறுகள் சொல்லும் முழக்கம். ஆகையால் திருச்சி 2-வது சாய்ஸாக இருக்கிறதாம்.
நெல்லை?: தென் மாவட்ட எல்லைகளை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் நெல்லையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தினால் என்ன என்பதும் விஜய் தரப்பின் ஆலோசனையாம். இதனடிப்படையில்தான் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 3 நகரங்களில் ஒன்றில் விஜய் தமது முதலாவது அரசியல் மாநாட்டை நடத்துவார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications