புரிஞ்சுதா.. "அவங்க" சகவாசமே வேணாம்.. கரண்ட்டை நிறுத்துங்க..ஸ்டாலின் என்ன செய்கிறார்: கஸ்தூரி ஆவேசம்
சென்னை: கர்நாடகாவில் நமக்கு தண்ணீரை நிறுத்தினால், நாம் அவர்களுடனான சகவாசத்தை நிறுத்துவோம்.. தக்காளியிலிருந்து, கத்தரிக்காயிலிருந்து, மின்சாரத்திலிருந்து நிறுத்துவோம்.. நம்ம அடிமடியிலேயே கை வைக்கறாங்களே.. நம்ம வாயிலயும், வயித்துலயும் அடிக்கிறாங்களே, அவங்களுக்கு மட்டும் எந்த வலியும் தெரியலியே ஏன்?" என்று கஸ்தூரி எழுப்பியுள்ள கேள்வி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார் நடிகை கஸ்தூரி.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதன் சுருக்கம்தான் இது:

காவிரி பிரச்சனை: காவிரி பிரச்சனையை பொறுத்தவரை நாம் ரொம்ப அமைதியாக டீல் பண்ணிட்டு இருக்கிறோம்.. காவிரி பிரச்சினையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மக்களின் குரல் எப்போது கேட்கும் என்றால், மக்களின் பிரதிநிதியாக ஆட்சியில் இருப்பவர்கள் குரல் கொடுத்தால்தான், அம்மக்களின் குரலும் கேட்கும்.. ஆனால், இவங்கதான் கூட்டாளிகளாக இருக்காங்களே.. அதனால் காவிரி விஷயத்தில் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கு..
காவிரி வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம்.. ஒரு நதி எங்கே அதிகமாக பாய்ந்து விழுகிறதோ, அந்த இடத்தில் உள்ளவர்களுக்குதான் அந்த நதி சொந்தம்..
வரலாற்று பூர்வமாக பார்த்தால், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா என்று 4 பேருக்குமே உரிமை உள்ளது. இதில், தமிழகத்துக்கு 75 சதவீதத்திற்கும் மேல் காவிரியில் உரிமை இருக்கிறது.. முக்கால் பாகம் தமிழ்நாட்டுக்குதான் காவிரி சொந்தம்., இது வரலாற்றுப்பூர்வமான யதார்த்தம்.
சாக்கடை: காவிரி நீர், கடல் வரைச்சென்று கலக்க வேண்டும். அப்போதுதான் அந்த நதிக்கு ஜீவநதி என்ற பெயர் பொருந்தும். ஆங்காங்கே அணைக் கட்டினால் அந்த நதி குளம், குட்டையாகி இறுதியில் சாக்கடையாக மாறிவிடும். ஆனால் படிப்படியாக குறைந்து இப்போது 40 சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது.. காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரைதிறந்து விட வேண்டும்.
காவிரி பிரச்சனை: காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் திரைப்பட நடிகர்கள் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை.. இண்டியா கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தண்ணீர் தருகிறாயா இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா என ஒரு கேள்வி கேட்காமல், திரை மறைவாக செயல்படுவோம் என தெரிவிக்கிறார். உரிய தண்ணீரை வழங்காவிட்டால். கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்தால் இந்நேரம் நமக்கான தண்ணீர் கிடைத்திருக்கும்..
பந்த் எதற்காக: வாக்குக்காக பணம் வாங்குங்கள், ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும், அரசியல்வாதிகளுக்கு நம்முடைய பிரதான பிரச்சினையைக்கூட பேசத்திராணி இல்லாதவர்களாக இங்கு இருக்கின்றார்கள். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நடக்கக்கூடிய வேலை நிறுத்தத்தை கர்நாடக எல்லையில் நடத்த வேண்டும்.. நாம் ஏன் நம்முடைய மாநிலத்தில் பந்த் நடத்த வேண்டும்? எதுக்காக வருமானத்தையும், நம்முடைய வியாபாரத்தையும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும்.
அவங்க நமக்கு தண்ணீரை நிறுத்தினால், நாம் அவர்களுடனான சகவாசத்தை நிறுத்துவோம்.. தக்காளியிலிருந்து கத்தரிக்காயிலிருந்து, மின்சாரத்திலிருந்து நிறுத்த வேண்டும். நெய்வேலியில் அன்று கரண்ட் நிறுத்தி, போராட்டம் நடத்தியதுமே, அடுத்த 2 நாளில் நமக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. அப்படி ஒரு முடிவை இங்கு நாம் எடுக்க வேண்டும்.
சித்தார்த்: நடிகர் சித்தார்த் தனது வீரத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டவில்லை என்றும் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுத்திருந்தால் கொண்டாப்பட்டிருப்பார்" என்றார்.
தொடர்ந்து லியோ படம் குறித்து கஸ்தூரி பேசும்போது, "விஜய் சினிமாவில் மதம் மற்றும் சாதி ரீதியான பிளவுகள் நிறைய வந்து விட்டது. சாதி ரீதியிலான படம் எடுத்து அதை முற்போக்குத்துவம் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். தமிழ் சினிமாவில் கொச்சை வார்த்தைகள் இடம்பெறுவது முதல் முறை கிடையாது. லியோ படத்தில் விஜய் அதுபோன்ற வசனம் பேசி இருக்கக்கூடாது.
அஜித் மங்காத்தா: நடிகர் விஜய்க்கு இளைஞர்கள்தான் அதிக ரசிகர்களாக உள்ளனர். அப்படி இருக்கும்போது தளபதி சொல்லிவிட்டார் என்று சாதாரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இதேவேலையை நடிகர் அஜித் மங்காத்தா படத்தில் செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தான்தான் இந்த வசனத்தை பேச வைத்ததாக கூறியிருக்கிறார்.
கெட்ட வார்த்தை பேசிதான் விஜய் படத்திற்கு கவனம் ஈர்க்க வேண்டும் என்றோ ஓபனிங் பெற வேண்டும் என்றோ அவசியம் இல்லை. விஜய் அந்த காட்சியில் கெட்ட வார்த்தை பேசினால்தான் உக்கிரமாக இருக்கும் என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தோல்வி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார் கஸ்தூரி.












Click it and Unblock the Notifications