10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்
சென்னை: அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு செய்தி என்றால் நடிகை மீனா தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய வீட்டை, தற்போது 100 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் என்பதுதான். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கேரளக் கட்டடக்கலை பாணி இல்லம், ஒரு என்.ஆர்.ஐ தம்பதியால் வாங்கப்பட்டது. இந்தச் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தையை உற்று நோக்குபவர்களுக்கு இது ஒரு பெரிய ஆச்சரியமல்ல. கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் நில மதிப்பு அடைந்த வளர்ச்சி அசுரத்தனமாக வளர்ந்துள்ளது
நடிகை மீனா 10 கோடியில் வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்றது உங்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக தெரிந்தாலும், அவர் வீடு வாங்கி விற்ற சைதாப்பேட்டை பகுதியைவிட சென்னையில் பல மடங்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்த ஏரியாக்கள் உள்ளன. சென்னையில் மிக அசுர வளர்ச்சி அடைந்த இடம் என்றால் அது சோழிங்கநல்லூர் தான். அதன்பிறகு தான் தெற்கே வேளச்சேரி முதல் வடக்கே அண்ணா நகர் வரை மற்ற பகுதிகளை கூற முடியும். அதேநேரம் தி நகர், மயிலாப்பூரில் சொத்தின் மதிப்பை கேட்டால் ஒரு நிமிடம் உங்களுக்கு தலையே சுற்றிவிடும்.. விரிவாக பார்ப்போம் மக்களே வாருங்கள்..

வேளச்சேரியின் விஸ்வரூபம்
2000-ஆம் ஆண்டு வாக்கில் வேளச்சேரி என்பது சதுப்பு நிலங்களுக்கு அருகிலுள்ள ஒரு சாதாரண குடியிருப்புப் பகுதி மட்டுமே. அப்போது அங்கு ஒரு கிரவுண்ட் நிலம் 10 லட்சத்திற்கும் குறைவாகவே கிடைத்தாக வாங்கியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இன்று, பீனிக்ஸ் மால், பறக்கும் ரயில் மற்றும் ஐடி நிறுவனங்களின் வருகையால் அதே ஒரு கிரவுண்ட் நிலம் 3 முதல் 4 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. சுமார் 30 முதல் 40 மடங்கு வளர்ச்சியை வேளச்சேரி கண்டுள்ளது.
ஐடி தலைநகரம் சோழிங்கநல்லூர்
வேளச்சேரியை விட அதிகப்படியான வளர்ச்சியைச் சந்தித்தது ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதி தான். சென்னையிலேயே உச்சபட்ச ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஏற்பட்ட பகுதி இதுதான். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கர் கணக்கில் விற்ற நிலங்கள், இன்று சதுர அடி கணக்கில் விற்கப்படுகின்றன. முட்புதர்களாக இருந்த இடங்கள் இன்று வானளாவிய ஐடி பூங்காக்களாகவும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறியிருக்கிறது. இங்கு நிலத்தின் மதிப்பு சுமார் 50 முதல் 100 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
மயிலாப்பூர்-திநகர் எப்படி
சென்னையின் இதயமாகக் கருதப்படும் மயிலாப்பூர், மந்தைவெளி, போன்ற பகுதிகளில் நிலம் என்பது எப்போதும் ஒரு 'தங்கம்' போன்றதாகவே இருந்தது. 2000-ல் 20-30 லட்சத்திற்கு விற்ற நிலம் இன்று 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இங்கு புதிய இடங்கள் கிடைக்காததால் பழைய வீடுகளின் மதிப்பு கோடிகளில் புரளுகிறது.
தி நகர்
சென்னையின் விலைமதிப்பற்ற வைரம் என்றால் அது தி நகர் தான்.. ஆம் சென்னையில் உச்சபட்ச நிலத்தின் பதிப்பு உள்ள இடம் தி நகர் தான்.. பெரும் கோடீஸ்வரர்களே நினைத்தாலும் வாங்கவே முடியாத ஒரு நகராக தியாகராய நகர் இருக்கிறது. ஏனெனில் தி.நகரில் நிலத்தின் மதிப்பு உயர்ந்த கதையே தனி தான். 2000-களின் தொடக்கத்தில் அங்கு நிலம் வாங்குவது என்பது பெரும் பணக்காரர்களால் மட்டுமே முடிந்தது. ஆனால் இன்று, அது கோடீஸ்வரர்களுக்கே எட்டாக்கனியாக மாறிவிட்டது. 2000-ல் தி.நகரின் உட்புறப் பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலம் ₹40 - ₹60 லட்சம் வரை இருந்தது. இன்று அதன் மதிப்பு ₹10 கோடி முதல் ₹15 கோடி வரை எகிறியிருக்கிறது..
40 கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது
ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் அல்லது உஸ்மான் ரோடு போன்ற பிரதான சாலைகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை இன்று ₹25 கோடி முதல் ₹40 கோடி வரை பேசப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே மிக அதிக வணிகப் பரிமாற்றம் நடக்கும் இடமாக இது இருப்பதால், அங்கு நிலத்திற்குப் பதில் தங்கத்தையே கொட்டித் தரலாம் என்ற நிலையே இருக்கிறது. எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கவே முடியாத அளவிற்கு திநகரில் சில பகுதிகள் இன்றும் உள்ளன. ரஜினி காந்த் வசிக்கும் போயஸ் கார்டன், சன்டிவி ஓனர் வசிக்கும் போர்ட் கிளப் ஆகிய பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகம் என்றாலும், அது கௌரவதிற்காகவே வாங்கப்படுகிறது. ஆனால் தி நகர் தான சென்னையிலேயே உச்சபட்சமான நிலத்தின் மதிப்பு உள்ள பகுதியாகும். தென்னிந்தியாவின் வணிக இதயம் தி நகர் தான்.
வெற்றிக்கான சூத்திரம் என்ன
ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சொத்தின் மதிப்பு உயர்வதற்கு அந்த இடத்தின் போக்குவரத்து வசதி (மெட்ரோ ரயில்), உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு மையங்களுக்கு அருகாமையில் இருப்பது ஆகியவையே முக்கிய காரணங்கள் ஆகும். நடிகை மீனாவின் வீடு 100 கோடியைத் தொட்டதற்கு அதன் அமைவிடம் மட்டுமல்லாமல், அந்த வீட்டின் தனித்துவமான கலைநயமும் ஒரு முக்கிய காரணம். சென்னையின் இந்தப் பொருளாதார வளர்ச்சி, சாதாரண நடுத்தர வர்க்கத்தினரைக் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது.
நீங்கள் 2000-ல் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அண்ணா நகர், தாம்பரம் என எங்கு நிலத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று உங்கள் கையில் இருப்பது வெறும் நிலமல்ல, அது ஒரு தங்கப்புதையல்.. உங்கள் பரம்பரையையே வாழ வைக்கும் வல்லமை உடையது. எனக்கு தெரிந்த நண்பரின் தந்தை கோவிலம்பாக்கம் விடுதலை நகரில் அதாவது ரேடியல் சாலையில் 2000களில் நிலம் வாங்கியிருந்ததால், அந்த நிலத்தின் மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications