"எடப்பாடி & ஓபிஎஸ்!" பிரதமரின் சென்னை பயணத்தில் நடக்கப் போகும் 'சம்பவம்'? பரபரக்கும் அதிமுக தலைகள்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இருந்தே, அதிமுகவில் தலைமை குறித்த சிக்கல் அவ்வப்போது எழுந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் இரட்டை தலைமையில் அதிமுக செயல்பட்ட போது தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளையே அதிமுக சந்தித்தது.

பொங்கிய ஒபிஎஸ்
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த குரல்கள் வலுவாக எழத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது, அப்போது கட்சிக்காகத் தான் பல முறை விட்டுக் கொடுத்து உள்ளதாகத் தெரிவித்த ஓபிஎஸ், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் துணை முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புக் கொண்டேன் என்றும் மற்றபடி எனக்குப் பதவி மீது ஆசையில்லை என்றும் கூறி அதிர வைத்தார்.

அதிரடி காட்டிய எடப்பாடி
இருப்பினும், இவையெல்லாம் ஒற்றை தலைமை குறித்த குரல்களை அடக்கிவிடவில்லை. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பொதுக் குழுக் கூட்டம் ஒரு புறம் நடக்க மறுபுறம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்.

அடுத்த கட்டம்
மேலும், ஓபிஎஸ் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதில் டென்ஷனான ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பிரச்சினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் செல்லும் வகையில், ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக் கூடாது என்றும் எடப்பாடி சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார்.

எடப்பாடி பழனிசாமி
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் எடப்பாடி தரப்புக்குச் சாதமாக அமைந்தது. சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியும் அதிமுக கணக்கு வழக்குகளும் எடப்பாடி தரப்பிற்கு ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மகிழ்ச்சியுடன் டெல்லி சென்ற எடப்பாடி எப்படியாவது பிரதமர் மோடியைச் சந்தித்து விட வேண்டும் எனத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அவரால் பிரதமர் மோடியையும் சந்திக்க முடியவில்லை, உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க முடியவில்லை.

ஏமாற்றம்
இங்கும் ஓபிஎஸ் ஆதரவாக சசிகலா அறிக்கை, குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி என அடுத்தடுத்து சம்பவங்கள் எடப்பாடிக்கு டென்ஷனை கொடுத்தது. இன்று நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் நிலையில், அதிலும் கலந்து கொள்ளவே எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அங்குச் சாதமான சிக்னல் கிடைக்காததால் தனது 4 நாட்கள் டெல்லி பயணத்தை இரு நாட்களிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஓபிஎஸ்
முன்னதாக ஓபிஎஸ் டெல்லி சென்ற போதும் இதுவே தான் நடந்தது. அவரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரையும் இருவரும் சந்திக்கவில்லை. இதனால் பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரை மற்றும் சந்திது விட்டு ஏமாற்றத்துடனேயே சென்னை திரும்பினார் ஓபிஎஸ். இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் டெல்லியிலிருந்து வந்த கால் ஓபிஎஸுக்கு சற்று நம்பிக்கை தருவதாகத் தெரிகிறது.

இரு தரப்பு
நடக்கும் விஷயங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, டெல்லி தரப்பு இப்போதைக்கு இருவரையும் சரி சமமாகவே பார்க்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்கத் திரௌபதி முர்மு இங்கு வந்த போதும் கூட இருவரையும் சந்தித்து இருந்தார். தேர்தல் ஆணையத்திற்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன என்பதை பொறுமையாகவே கவனித்து வருகிறது.
Recommended Video

பிரதமர் மோடி
இந்தச் சூழலில் வரும் 28ஆம் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார். அந்தச் சமயத்தில் அவரை சந்திக்க எடப்பாடி தரப்பு முயல்கிறது. ஓபிஎஸ் தரப்பும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் இருவரையுமே ஒரே நேரத்தில் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications