சூட்டோடு சூடாக டெல்லியில்.. குறுக்க யாரும் வரக்கூடது.. சட்டபூர்வ நடவடிக்கையில் வேகம்காட்டிய எடப்பாடி
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ட தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட விதிகள் தொடர்பாகவும், பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான விதிகளையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இன்று கட்சியின் மொத்த அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக, தேர்தல் ஆணையத்திலும் அதனை பதிவு செய்துள்ளார்.

பொதுச் செயலாளர்
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாளரை தேர்தல் மூலம் அடிப்படை உறுப்பினர்கள் தேர்தெந்தெடுப்பதற்கான வழிமுறைகளும் தீர்மானிக்கப்பட்டன. 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான விதிமுறைகள்
பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

துணை பொதுச் செயலாளர்
மேலும், மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும். இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. துணைச் பொதுச் செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

பொதுச் செயலாளருக்கே அதிகாரம்
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இருந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளுக்கு பதில் பொதுச் செயலாளர் என்ற விதி திருத்தப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தனது பணிகளை நிறைவேற்றுவார். நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் பொதுச்செயலாளரே கவனிப்பார்.

ஒட்டுமொத்த அதிகாரங்களும்
அனைத்து அமைப்புகளின் வரவு- செலவுகளை ஆராய்தல், அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எழும் சட்ட பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு அளிக்கப்படுகிறது. அ.தி.மு.க.வின் தேவைக்காக வங்கிகளில் கடன் வாங்குவதற்கும், அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
இந்நிலையில், பொதுக்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட விதிகளையும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது அதிமுக தலைமைக் கழகம். இதேபோல, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிப்பட்டிருப்பதையும் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது அதிமுக தலைமைக் கழகம்.












Click it and Unblock the Notifications