நடப்பதை கவனிச்சீங்களா? ‘எதை நோக்கி போகுது?’ இஸ்லாமியர்களின் தோழன் அதிமுக மட்டுமே.. ஜெயக்குமார் பரபர!
சென்னை : இஸ்லாமியர்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும், எப்போதும் இஸ்லாமியர்களுடன் தோளோடு தோள் நிற்கும் நண்பன் அதிமுக மட்டும் தான் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடக்கிறது. இந்த ஆட்சி இந்திய அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அப்போது, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றியும், பி.எஃப்.ஐ அமைப்பின் மீது என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தமிழக அரசு மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிபந்தனைகளுடன் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஜெயக்குமார் கருத்து
இந்நிலையில், இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பதால் அதுபற்றி கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கிறது என்பதால் நீதிமன்ற முடிவை மதிக்கின்ற சூழல்தான் இருக்கிறது. இதுகுறித்து இதற்குமேல் கருத்து சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

திமுக இரட்டை வேடம்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா மீதான சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுகவைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. நாங்கள் இஸ்லாமியர்களுக்கு அரண் என்று சொல்வார்கள், ஆனால், எப்போதும் முதுகில் குத்துவார்கள். இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்களின் முதுகில் குத்துவதே திமுகவின் பழக்கம்.

அதிமுக தான் இஸ்லாமியர்களின் நண்பன்
தேர்தல் நேரத்தில் மட்டும், எங்களைக் காட்டிலும் உங்களுக்கு வேறு நண்பர்களே இருக்க முடியாது என அவர்களிடம் கூறுவார்கள். உண்மையில் எப்போதும் இஸ்லாமியர்களுடன் தோளோடு தோள் நிற்கும் நண்பன் அதிமுக மட்டும் தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தமிழகத்தில் இந்து முஸ்லீம்கள் இடையே எந்தப் பிரச்சனையும் வரவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியைக் காத்தார் ஜெயலலிதா.

ஒரு ஃப்ளாஷ்பேக்
அப்படியே ஒரு ஃப்ளாஷ்பேக். 1998க்கு போனால் அத்வானி வரும்போது கோவையில் ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. இதனால் ஆட்சியை கலைத்து விடுவார்கள் எனக் கருதி இஸ்லாமிய மக்களை சிரமப்படுத்தினார்கள். சித்திரவதை செய்தார்கள். திமுக ஆட்சியில் டிசம்பர் 6ஆம் தேதி வந்தால் போதும் சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்களை இன்னலுக்கு உள்ளாக்குவார்கள்.

356-ஐ நோக்கி
தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடக்கிறது. இந்த ஆட்சி இந்திய அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் இல்லை. ஏன் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு அந்தளவுக்கு சீர்கெட்டு விட்டது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications