விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக! பாமகவுக்கு மறைமுக ஆதரவு?
சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் திமுக அராஜகங்கள், தில்லுமுல்லுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் என்றாலே முதலில் களத்தில் இறங்குவது அதிமுகதான். தேர்தலைக் கண்டு அஞ்சுகிற, பயப்படுகிற, அச்சப்படுகிற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர் என்றும் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருப்பதாவது: அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என சொல்வது பாமகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பது போன்றுதான். நேரடியாக ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தம். அதனால் போட்டியிலிருந்து விலகி பாமகவை ஆதரிப்பதாகவே நான் பார்க்கிறேன் என்றார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: பொதுவாக தேர்தல் என்ற உடனேயே முதலாவதாக களத்தில் இறங்குவது அதிமுகதான். தேர்தலைக் கண்டு அஞ்சுகிற, பயப்படுகிற , அச்சப்படுகிற இயக்கம் அதிமுக இல்லை என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுகவினர் ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும் தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

அராஜகம் என்றால் திமுக, திமுக என்றால் அராஜகம். திமுகவினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக 18.8.2009 ஆம் ஆண்டு நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் 27.2.2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் உள்பட திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேரேதல்களையும் ஜெயலலிதா புறக்கணித்தார். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

2006 ஆம் ஆண்டு மைனாரிட்டி திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் திமுகவினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள் தமிழகமெங்கும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டது, தேர்தல் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டது. அதிமுக வென்ற இடங்களில் தேர்தல் அதிகாரியை மிரட்டி திமுகதான் வெற்றி பெற்றது என அறிவிக்கச் செய்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
அது போல் 19.2.2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பணபலம், படை பலத்துடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களையும் வன்முறைகளையும் அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.
அதைத் தொடர்ந்து விடியா திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என தெரிந்த திமுக, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்தது. திருமங்கலம் பார்முலா என்ற பெயரில் மக்கள் வாக்குகளை விலை பேசியதைப் போல ஈரோடு கிழக்கு பார்முலா என்ற ஒன்றை உருவாக்கி ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல் வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியது.
எதிர்கட்சியின் பரப்புகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். மக்களை அடைத்து வைத்தால் மக்கள் அடைக்கப்பட்டிருக்கிற இடத்திற்கு சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்த பிறகு பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்து செல்லும் புது பார்முலாவை திமுக அறிமுகப்படுத்தியது.
அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. திமுகவின் மக்கள் அடைப்பு முகாம்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுகவினரால் மிரட்டப்பட்டார்கள். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவும், வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி ஜனநாயகப் படுகொலை நடந்தேறியது.
ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது, விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுகவினரின் முகத்திரையைக் கிழித்து திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நல்லாசியோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் மக்கள் நலன் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications