தீர்மானம் 15.. பாஜகவுக்கு எடப்பாடி “சைலண்ட் மெசேஜ்”! அண்ணாமலைக்கு “ரெட் சிக்னல்” - அதிமுக வீரசபதம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கும் நிலையில் அதில் குறிப்பாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 15 முக்கிய தீர்மானங்களை அக்கட்சி நிறைவேற்றி உள்ளது. இதில் கடைசி தீர்மானத்தில் தமிழ்நாடு பாஜகவுக்கு சொல்லாமல் ஒரு விசயத்தை சைலண்டாக சொல்லி இருக்கிறது அதிமுக.

அந்த 15 வது தீர்மானத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது, "வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும்; அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் மனங்களைக் கவர்ந்த தலைவராகவும், நம்பிக்கை அரசியலுக்கு நாயகராகவும் திகழ்ந்தவர். சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நாளெல்லாம் போராடி நல்லாட்சி தந்தவர்.
புரட்சித் தலைவரின் வெற்றிப் பாதையில் பீடுநடை போட்டு, கழகத்தை அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு வித்திட்டவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும்." என்று வீர முழக்கமிட்டவர்.

தீய சக்தியை எதிர்த்து மக்களைக் காத்த நம் இருபெரும் தலைவர்களின் ஆசிர்வாதத்தோடும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளின் பேராதரவோடும், வாராது வந்த மாமணி போல் கழகம் காத்து, தமிழகம் மீட்க வந்திருக்கின்ற கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் சீரிய தலைமையை ஏற்று, அவர் காட்டும் பாதையில் பயணித்து, வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், கழகத் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டிடவும்; அதற்கடுத்து வரவிருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலிலும் முழுமையான பெருவெற்றியை ஈட்டி, கழகப் பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் கழகத்தின் நல்லாட்சி மீண்டும் மலரவும், அயாராது உழைத்திட சூளுரை ஏற்போம்; வெற்றி பெறுவோம் என்று இந்தச் செயற்குழு வீரசபதம் ஏற்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் பாஜக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் தனியாக இருந்தால் மட்டுமே பாஜகவை வளர்க்க முடியும். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். எனது வழியில் செயல்பட முடியாதபோது பதவியில் இருந்தே ராஜினாமா செய்கிறேன்." என்று தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக தலைமையில் கூட்டணி என்ற தீர்மானத்தையே நிறைவேற்றி உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications