காய் நகர்த்தும் எடப்பாடி.. "பாமக vs தேமுதிக!" ராஜ்யசபா சீட் யாருக்கு! தராசு ஷ்யாம் சொன்ன பாயிண்டு
சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே இந்த ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்தத் தேர்தல் அதிமுகவுக்குத் தலைவலியையே கொடுக்கும் என்கிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இதில் திமுக, அதிமுக கூட்டணி என்ன முடிவை எடுக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்கள் காலியாகிறது. இவர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்பத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் சூழலில், மார்ச் 16ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு இரு இடங்களும் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் திமுகவைக் காட்டிலும் அதிமுகவுக்கே சிக்கல் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்!
இது குறித்து சன் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுகவுக்கு இதில் நெருக்கடி இருக்கிறது. ஏனென்றால் சட்டசபையில் அவர்கள் பலம் குறைந்துள்ளது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ராஜினாமா செய்திருந்தனர். எனவே அதிமுக பலம் குறைந்துள்ளது. இரண்டு எம்பி சீட்களுக்கு 66 முதல் 68 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.
அதிமுக சிக்கல்
அந்த 66 என்ற நம்பரை கொண்டு வர அதிமுகவின் தற்போதைய நிலை போதாது. பாமக முழு ஆதரவு தர வேண்டும். ஆனால், பாமக பிளவுபட்டு இருக்கிறது. இடங்களைப் பொறுத்தவரை பாமகவுக்கு ஒரு இடம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவும் கூட ராஜ்யசபா சீட் கேட்கலாம். தேமுதிக கூட ஏற்கனவே ராஜ்யசபா சீட் கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, அதிமுகவுக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது.
திமுகவுக்கு பிரச்சனையில்லை
திமுகவுக்கு நெருக்கடி இல்லை என்றே நினைக்கிறேன். நான்கு சீட்டு அப்படியே வந்துவிடும். ஐந்தாவது சீட்டு கூட முயற்சி செய்யலாம். எம்ஜிஆர் காலத்தில் இதுபோல ஐந்தாவது சீட்டிற்கு முயற்சி நடந்திருக்கிறது. ராஜ்யசபா தேர்தலில் முதல் விருப்பம், இரண்டாம் விருப்பம் எனத் தேர்தல் நடக்கும். யாரும் போட்டி இல்லை. 6 பேர் தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றால் அது அப்படியே ஒதுக்கப்படும்.
அதேநேரம் கூடுதலாக வேட்புமனு வந்தால் தேர்தல் நடக்கும். தமிழ்நாடு சமீபத்தில் அப்படியான ஒரு தேர்தல் நடந்தது இல்லை. தற்போதைய சூழலில் திமுகவுக்கு 4 சீட்கள் உறுதி. அதிமுகவுக்கு 2 இடங்களில் ஒன்றுக்கே போராட வேண்டி இருக்கும்" என்றார்.
தேமுதிகவுக்கு வாய்ப்பில்லை
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்பது குறித்துப் பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எம்பி சீட் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் ஒரு இடம் ஏற்கனவே பாமகவுக்கு உறுதியளித்துவிட்டனர். அப்படியிருக்கும்போது இன்னொரு சீட்டை தேமுதிகவுக்கு கொடுத்தால் அதிமுக சீனியர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். செம்மலை உள்ளிட்ட சீனியர்கள் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கடந்த முறையும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் தேமுதிகவுக்கு 2026ல் ராஜ்யசபா சீட்டை தருகிறோம் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்ததாக தேமுதிக சொல்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால் தான் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும். திமுக கூட்டணியிலும் கூட தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காது என்றே நினைக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications