அதிமுகவில் மீண்டும் சசிகலா? இன்று முக்கிய ஆலோசனை! பொதுக்கூட்டத்தில் மாஸ் காட்ட பிளான்!
சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என சசிகலா கூறிவரும் நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை கள்ளக்குறிச்சி அரசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என சசிகலா கூறி வருகிறார். ஆனால், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசூரில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் நிலவி வரும் தலைமைப் போட்டி மற்றும் உட்கட்சிப் பூசல்கள் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிற்கு அதிமுகவில் இடமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், சசிகலா இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகச் சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலைச் சந்திக்க புதிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தற்போதைய அதிமுகவிற்கு தனது பலத்தைக் காட்ட சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை எப்படி பார்க்கிறீர்கள்? என சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதில் அளித்த சசிகலா, "ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு பெரிய கருங்கல் மலை இருந்தது. ஒரு ஆள் ஒரு பெரிய கடப்பாரையை கொண்டு அந்த மலையை பெயர்த்தெடுக்க நினைக்கிறார். எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் அந்த மலையில் ஒரு ஆறடி உயரத்தில் மரம் ஒன்று வளர்ந்திருக்கிறது.
இவ்வளவு கடினமான பாறையில் மரம் எப்படி முளைத்தது? என பார்க்கிறார். அப்போது அந்த மரம் சொல்லாமல் சொல்கிறது. ஒரு விதையிலிருந்து மரம் முளைத்தது. அந்த விதையிடமிருந்தது வெறும் அன்பு மட்டும் தான். அந்த அன்பினால் தான் மரம் வளர்ந்தது. இந்த கதையின் அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
மேலும், எதிர்வரும் சட்டசபை தேர்தல் குறித்து பேசிய சசிகலா, "உண்மையான மக்களாட்சியை இரண்டு தலைவர்கள் தான் நடத்தினார்கள். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இப்போது இருக்கிறவர்கள் எல்லாம் பேசிக் கொண்டு மட்டும்தான் உள்ளனர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் எதிரியே இல்லை என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒருத்தி இருப்பதையே மறந்துவிட்டு பேசி வருகிறது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications