பாஜக -அதிமுக கூட்டணி உடைகிறதா? எடப்பாடி முன்பு ஒட்டு மொத்தமாக ஆவேசமான அதிமுக மா.செ.க்கள்!
சென்னை: பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடைகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,அண்ணாமலைக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் கொந்தளித்து பேசிய போது, அவர்களை சமாதானம் செய்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளதாகவும், சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அளித்த பேட்டி, அதிமுகவினரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களுமே ஒருமித்த குரலில் ஒரே கருத்தை தெரிவித்துள்ளார்கள். பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்குமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனங்களை பதிவு செய்ததுடன், சகித்தது போதும், பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்று கொந்தளித்தார்களாம்.
மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளோம்.அவர்கள் இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள் என்று பாக்கலாம். இதில் சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு உள்பட பலரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை அமைதியாகவே உள்ளார். அண்ணாமலையை வெளிப்படையாக இப்போது விமர்சிக்கவில்லை. ஒருவேளை பாஜக மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்று காத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி விவகாரத்தில் மோதல் அதிகரித்துக்கொண்ட வருவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications