30 தொகுதிகள் வாங்கி கொடுங்க.. பாஜகவிடம் டிமாண்ட் வைத்த அன்புமணி.. முடிவுக்கு வரும் பேச்சுவார்த்தை!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அன்புமணி தரப்பில் 30 தொகுதிகள் டிமாண்ட் வைத்திருப்பதாகவும், அதனை பாஜக நிர்வாகி வைஜயந்த் பாண்டாவிடம் அழுத்தமாக கூறியதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை அத்தனை கட்சிகளும் இணக்கமாக இருக்கும் நிலையில், இன்னும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இணையும் என்று தெரிகிறது. அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே பாஜகவுடன் தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் நெருக்கம் காட்டி வருகின்றன. இதில் பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. பாமகவின் தலைவர் தாம்தான் என்று ராமதாஸ் தொடர்ச்சியாக பேசுவதோடு, செயல்பட்டும் வருகிறார். மறுபக்கம் அன்புமணி பல்வேறு கூட்டங்களையும், நிர்வாகிகளையும் நியமித்து அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக நேரடியாக தொடங்காமல், பாஜக மூலமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக பாஜக பொறுப்பாளரான வைஜந்த் பாண்டா பாமக தலைவர் அன்புமணியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார். அன்புமணியுடன் பேசிய அடுத்த நாளிலேயே ராமதாஸையும் இவர் சந்தித்திருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்புமே அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராமதாஸ் கொஞ்சம் நாட்கள் செல்லட்டும் என்று கூறியதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனிடையே பாமக தலைவர் அன்புமணி முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருவதற்கு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இம்முறை 30 தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்திருக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் இம்முறை பாமகவுக்கு 20 தொகுதிகளுக்கும் குறைவாக ஒதுக்கீடு செய்ய அதிமுக முடிவு எடுத்துள்ளது.
ஆனால் அன்புமணி 20 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட விரும்ப மாட்டார். ஏற்கனவே பாஜக இம்முறை 40 தொகுதிகள் வரை கேட்டு வரும் சூழலில், பாமக 30 தொகுதிகள் கோரினால், அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications