ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..பாஜக கூட்டணியால் கிடைக்கும் ’லாபம்’.. எடப்பாடி பழனிசாமியின் சைலண்ட் ப்ளான்
சென்னை: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார். 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறி இருப்பதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி வரும் என ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றாலும் இதன் மூலம் பல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருக்கிறார் என்கின்றனர். குறிப்பாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கான்செப்ட் இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஜெயலலிதா இருந்தவரை பாஜக தமிழகத்தில் கால் மட்டும் அல்ல விரலைக் கூட ஊன்ற முடியாது என்ற நிலை தான் இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு லெட்டர் பேடு கட்சியாக தான் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பல அணிகளாக சிதறுண்ட நிலையில் பாஜக மெதுவாக உள்ளே வந்தது என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து அணிகள் பிரிவு, அணிகள் இணைப்பு என பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் ஐடி ரெய்டுகளும் பறந்தது.
ஒரு கட்டத்தில் பாஜக அதிமுக கூட்டணி உருவானது. தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதற்குப் பிறகு அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் புயலைக் கிளப்ப வெகுண்டெழுந்தன அதிமுக புள்ளிகள். அண்ணாமலையை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கின. ஆனாலும் டெல்லி தலைமை அண்ணாமலையை மாற்றவில்லை. இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
தொடர்ந்து சில பல அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி நேற்று அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். டாஸ்மாக் ஊழல் விவகாரம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து தான் பேசினேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும், 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிட்டத்தட்ட 550 நாட்களுக்குப் பிறகு அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கிறது.
சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது எனக் கூறப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நினைக்கிறாராம். காரணம் கடந்த தேர்தலை போலவே அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்பது எடப்பாடியின் முதல் திட்டம். அதன்படி அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஜான் பாண்டியன் தமமுக இன்னும் சில கட்சிகள், அமைப்புகள் ஆதரவு கிடைக்கும். இதனால் கடந்த மக்களவைத் தேர்தலில் பிரிந்த வாக்குகள் ஒன்று சேரும்போது நிச்சயம் திமுகவை தோற்கடிக்க முடியும் என்பது எடப்பாடி கணக்கு.
அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள்ளும் சேர்க்கக்கூடாது. அதே நேரத்தில் அவர்களது ஆதரவு வாக்குகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கடந்த தேர்தலை போல ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக சின்னத்திலோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிட வைத்து அவர்களது ஆதரவு வாக்குகளையும் அறுவடை செய்துவிடலாம். அவர்களை கட்சியில் சேர்க்காமல் ஆதரவையும் பெற்றது போல ஆகிவிட்டது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பிளானை எடப்பாடி பழனிச்சாமி எக்ஸிக்யூட் செய்து இருக்கிறார்.
மேலும் திமுக எதிர்ப்பு வாக்குகள், அரசு ஊழியர்களின் ஆதரவு, சமுதாய வாக்கு வங்கி என அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதோடு டெல்லி ஆதரவும் 2026 தேர்தலில் தேவை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணிக்கு ஓகே சொன்னதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications