திண்டுக்கல் சீனிவாசனை அதிமுக பொருளாளராக வங்கிகள் ஏற்றதா? தப்பான தகவல்.. கோவை செல்வராஜ் கொந்தளிப்பு
சென்னை: ‛‛நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எந்த வங்கியும் யாரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது'' என ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைத்தூக்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட திட்டமிட்டார். இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை.

நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம்
இதையடுத்து பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றம் படியேறியது. இருப்பினும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு ஓ பன்னீர் செல்வத்தின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன்
இதையடுத்து கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவை பொறுத்தமட்டில் கட்சியின் வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை பொருளாளர் தான் கையாள்வார். இதனால் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது குறித்து அதிமுக வங்கி கணக்குகளை கையாளும் வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொருளாளர் நான் தான். என்னை கேட்காமல் வங்கி பரிவர்த்தனை எதையும் மேற்கொள்ள கூடாது சம்பந்தப்பட்ட வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டது.

வங்கி ஏற்பு
இந்நிலையில் தான் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட வங்கி காசோலையை அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது உறுதியாகி உள்ளது.

கோவை செல்வராஜ் பேட்டி
இந்நிலையில் தான் இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛எந்த வங்கியும், யாரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. அதிமுகவின் கணக்கில் இருந்து செக் மூலம் வங்கியில் பணம் எடுத்து உள்ளார்களா? எனக் கூறுங்கள். நான் அதற்கு பதில் அளிக்கிறேன். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ளதால் எந்த வங்கியும் எதனையும் அனுமதிக்கவில்லை. இதில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஓபன்னீர் செல்வம், மூத்த நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். அவர்கள் கூறுவது போல் அதனை கேட்டு நாங்கள் செயல்படுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications