2 - 2 பேராக பிரிஞ்சு வேலைய ஆரம்பிங்க.. முன்னாள் அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!
சென்னை: அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில் 2 - 2 பேராக தனித்தனியாகப் பிரிந்து, மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கள ஆய்வு செய்ய வேண்டிய மாவட்டங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும் அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக அதிமுக சார்பில் கள ஆய்வுக் குழு அமைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு:
1. கே.பி. முனுசாமி, MLA., கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
2. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
3. நத்தம் இரா.விசுவநாதன், M.L.A., கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. பி தங்கமணி, M.L.A, கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
5. S.P.வேலுமணி M.L.A., கழக தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
6. D. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
7. C.Ve. சண்முகம், M.P., கழக அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
8. செ. செம்மலை, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
9. பா. வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
10. வரகூர் அ. அருணாசலம். கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்டங்கள் விபரம் !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) November 11, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/PnvCQJxJiU
இந்தக் குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில் 2 - 2 பேராக தனித்தனியாகப் பிரிந்து, மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கள ஆய்வு செய்ய வேண்டிய மாவட்டங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும் புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்துவிட்டதா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கள ஆய்வுக் குழுவினர், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், கள ஆய்வுக் குழுவினர் தங்கள் மாவட்டங்களுக்கு வந்து கள ஆய்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், கள ஆய்வுக் குழுவினர் தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் விபரங்களை, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்ட அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 8 மாவட்டங்களுக்கும், சென்னை புறநகர் மாவட்டத்திற்குமான கள ஆய்வு மேற்கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications