சர்ச்சையான அதிமுக தேர்தல் வாக்குறுதி! ரூ 10000 'கருணைத் தொகையை' திருத்தம் செய்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ 10000 கருணைத் தொகை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தது சர்ச்சையான நிலையில் கருணைத் தொகையை உதவித் தொகை என திருத்தம் செய்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழக மக்களின் பேரன்பைப் பெற்று மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுக சார்பில் அளிக்கப்படும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்:
- ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக ரூ 10000 வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதம் ரூ 2000. பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும்.
- மீன் பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ 8 ஆயிரத்தில் இருந்து ரூ 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ 1000 வழங்கப்படும்.
- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள 6 தேர்தல் அறிக்கைகளை இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அது போல் முதல் கட்டமாக எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17ஆம் தேதியும், 2ஆவது கட்டமாத கடந்த 4ஆம் தேதியும் வெளியான நிலையில் இன்று 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியானது.
இந்த வாக்குறுதியில் ரூ 10000 கருணைத் தொகை என குறிப்பிட்டிருந்த நிலையில், கருணை என்ற சொல்லுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உதவித் தொகை என மாற்றினார்.












Click it and Unblock the Notifications