ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித் ஷா உடன் முக்கிய மீட்டிங்.. பரபர பின்னணி
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் 66 இடங்களில் வென்று தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக.
திமுக ஆட்சி அமைந்தது பிறகு, முதல்முறையாக நீட், மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது.

டெல்லி பயணம்
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் விமானம் மூலம் அவர் டெல்லி செல்லவுள்ளார். தமிழ்நாடு அரசியல் பல்வேறு மாற்றங்கள் சந்திக்க தொடங்கியுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மோடி, அமித் ஷா
மேலும், ஓ பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நதியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் மட்டும் கர்நாடகா அணைக் கட்டினால் இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேகதாது அணைக்கு அனுமதியளிக்கக் கூடாது என்பது தொடர்பாக மோடி மற்றும் அமித் ஷாவிடம் ஓபிஎஸ் நேரில் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதே அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத்க்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா ஆடியோ அரசியல்
இதில் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை குறித்தும் ஆலோசிக்கப்படலாம். குறிப்பாக, சசிகலா அதிமுக கைப்பற்றுவதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்த ஆடியோவில்கூட, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோரை அரவணைத்துச் செல்லவே விரும்பியதாக சசிகலா பேசியிருந்தார். சசிகலாவின் இந்த ஆடியோ அரசியல் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications