வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவு அளிக்க போகிறாரா? அதிமுகவில் என்ன நடக்கிறது
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிபெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 12 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, த.வெ.க.வுக்கு ஆதரவளிக்க போவதாக தகவல்கள் வெளியாகியது. இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் வெளிவந்த தகவலின் படி, சிவி சண்முகம் ஆதரவு எம்எம்எல்ஏக்கள், தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பை 5 வருடங்களாக இழந்துள்ளதால், தவெகவிற்கு ஆதரவு தந்து ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். இதனால் வேறுவழியின்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவு தர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருககிறது.. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது உறுதி. அதன்படி, விஜய் முதல்வராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம் ஆகும். அத்துடன் கவர்னர் அழைக்க வேண்டும் என்றால், ஆதரவு எம்எல்ஏக்கள் 118 பேரின் கடிதத்தை அளிக்க வேண்டும். இதுதான் நியதி. எனினும் ஆளுநர், தனிப்பெரும் கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். ஏற்கனவே சொன்னதுபோல், அதன்பிறகு சட்டசபையை கூட்டி தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
அந்த நிகழ்வில் சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும். இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்: இதனால் ஒரு தொகுதியை தவெக இழக்கும்.
ஆகவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் தவெக சார்பில் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனெனில் காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை.
இதற்கிடையில், டெல்லியில், நேற்று இரவு பேசிய காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆட்சி அமைக்க தவெக காங்கிரசிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூறினார். இது ஒருபுறம் எனில், 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகள், 2 உறுப்பினர்கள் கொண்ட விசிக 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்திய முஸ்லிம் லீக் மற்றும் தே.மு.தி.க.வின் ஒரே எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்ககப்பட்து. அப்படி நடந்தால் தவெகவின் பலம் 106-லிருந்து 119 ஆக உயரும். இது பெரும்பான்மைக்கு போதுமானது.
ஆனாலும் 119 என்ற குறைந்த வித்தியாச எண்ணிக்கையுடன் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவது என்பது நிலையானதாக இருக்காது என்பதால், அரசியல் மாற்றங்கள் எளிதாக ஏற்படும். எனவே இன்னும் கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறது.
அதன்படி அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இணைக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு இருக்கிறது. அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள பாமக, தவெக உடன் கூட்டணி சேர விரும்புகிறதாம். எனவே எந்த நேரத்திலும் அன்புமணி ராமதாஸ்-விஜய் சந்திப்பு நிகழலாம் என்று சொல்கிறார்கள்.
விஜய் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்து தான் கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் அப்போது யாரும் போகவில்லை.. எனவே த.வெ.க.வுடன் சேர்ந்தால் அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பாமக மற்றும் பல்வேறு கட்சிகளுக்கு உள்ளது. எனினும் இப்படி கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.
அதேபோல் அதிமுகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றபடி, அதிமுகவும், தவெகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த கட்சியின் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கூறியிருந்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு, இதனை தெரிவித்தார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கு போயிருக்கிறது. விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக வெளிப்படையாக கோரிக்கை வைத்தது. இது ஒருபுறம் எனில் சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கணிசமானோர் தவெகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகிறார்களாம். ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு உள்ள வாய்ப்பை கண்டிப்பாக பெற வேண்டும் என்றும், அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.. இதனால் வேறுவழியின்றி எடப்பாடி பழனிசாமி தவெகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications