“உன் வயசுக்கு இப்படி பேசலாமா? என்ன பிழைப்பு இது?" செங்கோட்டையன் மீது அதிமுக மா.செ சரமாரி அட்டாக்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக மாவட்ட செயலாளர் சரமாரியாகத் தாக்கிப் பேசியுள்ளார். விஜய்யை புகழ்ந்து பேசி வரும் செங்கோட்டையனை கடுமையாக பொதுக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார் அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ பண்ணாரி வரவேற்று பேசினாார். அதனைத் தொடர்ந்து அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் பேசும் போது, முன்னாள் அமைச்சரும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையனை கடுமையாக தாக்கி பேசினார்.

பொதுக்கூட்டத்தில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் பேசுகையில், "சென்னையில் நடந்த தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் பேசும்போது 50 ஆண்டு அரசியல் வரலாற்றில் எத்தனையோ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன், தவெக தலைவர் விஜய் போன்று தலைவரை பார்த்ததில்லை எனப் பேசியுள்ளார். அவரைப் பார்த்துக் கேட்கிறேன்.
அப்படியென்றால் எம்ஜிஆரை காட்டிலும் ஜெயலலிதாவை காட்டிலும் விஜய் பெரிய தலைவரா? நாக்கு எப்படி வேண்டுமானும் பேசலாமா? உன் வயதில் அப்படி பேசலாமா? நான் இப்படிக் கேட்கக்கூடாது.. என்ன பிழைப்பு இது, என்ன பிழைப்பு இது? அவமானம், இது அவமானமாக இருக்கிறது. யார் பின்னாடி வேண்டுமானும் போங்க.. அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது.
அதிமுக இயக்கத்தில் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்டு கருத்து வேறுபாடு என்று தனியாக இருந்திருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும். மதிப்பு மரியாத உயர்ந்திருக்கும். இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி பேசுவது எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கிறது. நீங்கள் தோற்கப்போவதில் எந்த மாற்றமும் கிடையாது. இனிமேலாவது இப்படிப் பேசாதீர்கள். நாவடக்கத்தோடு பேசுங்கள்
கோபிசெட்டிப்பாளையம் அதிமுக கோட்டை, உங்களோடு இருந்தவர்கள் எல்லாம் இயக்கம் தான் பெரியது என்று எடப்பாடியார் பக்கம் உள்ளனர். செங்கோட்டையன் என்ற தனி மனிதனை விட இயக்கமே பெரிது என்று வந்துவிட்டார்கள். விளையாட்டுப் போட்டியில் விசில் அடித்தால் அவுட் என்று அர்த்தம். செங்கோட்டையன் அரசியல் அவுட் ஆகிவிட்டது. " என ஆவேசமாகப் பேசியுள்ளார் ஏ.கே.செல்வராஜ்.












Click it and Unblock the Notifications