அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி.. சொன்னதை எடப்பாடி பழனிசாமி செய்ய மாட்டார்.. ஆர்எஸ் பாரதி!
சென்னை: அதிமுக எத்தனை தேர்தல் வாக்குறுதியை கொடுத்தாலும், அதனை செயல்படுத்த மாட்டார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். நிதி நிலைமையை திமுக சரியாக கையாளவில்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கும் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக ஆட்சிக்கு வந்தால், குலவிளக்கு திட்டம் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.

இது குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் மகளிர் உதவித் தொகையாக ரூ.1,500 அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ரூ.500 உயர்த்தி இம்முறை புதிய வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதேபோல் திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆண்களுக்கும் விரிவாக்கம் செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், 5 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த திட்டமாகும். தொடர்ந்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் வீடு இல்லாதோருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பழைய திட்டங்களை விரிவாக்கம் செய்கிறோம் என்று அறிவித்திருக்கிறார். அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் இல்லாதது விவாதமாகி இருக்கிறது.
புதிய திட்டங்களோ, சிந்தனைகளோ இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை சொன்னதை செய்து காட்டியுள்ளோம். ரூ.15 லட்சம் வங்கிக்கணக்கில் போடுவோம் என்று பாஜகவினர் கூறினார்கள். அதுபற்றி இதுவரை மூச்சு கூட விடவில்லை. திமுக எதையும் சிந்தித்து செயல்பட்டு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக நிதி நிலைமையை சரியாக கையாளவில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி அறியாமையில் இருக்கிறார். எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு நெருக்கடியை பாஜக கொடுத்த போதும், தமிழ்நாட்டின் ஜிடிபி வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. அதிமுக என்ன சொன்னாலும், எதையும் செய்ய மாட்டார்கள். பாஜகவும் அப்படிதான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications