செங்ஸ் சொன்னது உண்மை தானாமே! தவெகவுக்கு தாவும் அதிமுக மாஜிகள்? இரவில் பரபர மீட்டிங்! இபிஎஸுக்கு ஷாக்
சென்னை: ஈரோட்டில் நடிகர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் 16ம் தேதியில் இருந்து 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என அதிரடியாக பேசியிருக்கிறார் செங்கோட்டையன். இந்த நிலையில், நேற்று செங்கோட்டையன் அதிமுகவில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்களிடம் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்வைத்து காய்களை நகர்த்தி வருகிறார். அனுபவம் இல்லாத தலைவர்களால் தமிழக வெற்றிக்கழகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது என உணர்ந்த விஜய் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் சீனியர்களுக்கு பனையூர் கதவை திறந்து வைத்திருக்கிறார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இணைந்து நிலையில் அதற்குப் பிறகு யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய ஆர்வம் காட்டினர்.

ஈரோடு தவெக கூட்டம்
இருந்த போதும் விஜய் தரப்பை நேரடியாக அணுக முடியாததால் அவர்கள் திமுக தரப்பில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிமுகவுக்கு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவை என்பதை உணர்ந்த விஜய் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு ஏராளமான செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையின் மூலம் மேலும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தவெக
அந்த வகையில் ஏற்கனவே அதிமுகவில் இருந்த திராவிட பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். திராவிட இயக்க அரசியல் மட்டுமல்லாது இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்ற அவர் 10 மணி நேரம் கூட தொடர்ந்து பேசும் ஆற்றல் உடையவர் என தமிழக வெற்றிக்கழக தம்பிகள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையன் சென்றதால் ஈரோட்டில் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதை பொய்யாக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
செங்கோட்டையன்
அதே நேரத்தில் தனது செல்வாக்கை வெளி காட்ட வேண்டுமென செங்கோட்டையனும் எடப்பாடிக்கு போட்டியாக ஈரோட்டில் கூட்டம் நடத்த இருக்கிறார். அதே நேரத்தில் காவல் துறை கெடுபிடிகள் காரணமாக விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் தள்ளிக் கொண்டே செல்கிறது. பல இடங்களை சுட்டிக்காட்டியும் காவல்துறை அதற்கு அனுமதி அளிக்காததால் தற்போது வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அதிமுக மாஜிகள் தாவல்
இதற்கிடையே 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விஜயின் பொதுக்கூட்டம் 18ம் தேதி நடைபெறும் என கூறியுள்ளார் செங்கோட்டையன். இந்த கூட்டத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அதிமுகவை சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறார்கள் எனவும், அவர்களைப் பற்றி தற்போது சொல்ல முடியாது என சொல்லி இருக்கிறார் செங்கோட்டையன். இது உண்மையாகவே நடக்கப் போகிறதா அல்லது வெறும் விளம்பரத்திற்காக செங்கோட்டையில் பேசுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இரவு ரகசிய சந்திப்பு
இந்த நிலையில் செங்கோட்டையன் சொன்னது உண்மைதான் என்கின்றனர் விபரம் அறிந்த அதிமுகவினர். எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்களும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் செங்கோட்டையுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் அதிமுகவை சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்களை நேரடியாக சந்தித்து பேசி இருக்கிறார். மேலும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சருடன் செங்கோட்டையன் பேசியதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். 18ஆம் தேதி விஜய் ஈரோடு வரும்போது நிச்சயம் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு இருக்கும் எனவும் இது எடப்பாடிக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்கின்றனர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications