இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்?
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, தற்போது அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது, அந்தக் கட்சிக்குள் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், 1977ல் ஆட்சியை இழந்ததற்கு பிறகு காங்கிரஸ் எதிர்க் கட்சியாக கூட ஆக முடியாத நிலையில் தற்போது வரை உள்ளது. தற்போது அதே நிலை தான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர் அதிமுகவினர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை கூட்டணிக் கட்சிகளின் மூலம் பெற்று விஜய் தலைமையில் அரசு அமைந்தது.
மறுபுறம், பல ஆண்டுகளாக தமிழக அரசியலின் முக்கிய சக்தியாக இருந்த அதிமுக கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி வெறும் தேர்தல் பின்னடைவு மட்டுமல்லாமல், கட்சியின் எதிர்காலம் குறித்த கவலையையும் அதிமுகவினரிடையே உருவாக்கியது.

அதிமுக
ஏற்கனவே 2021 தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத சூழலில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு கட்சிக்குள் சோர்வை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நான்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் இணைந்தனர்.
தவெக
அதைத் தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் தவெக முகாமை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். இதனால், "தவெக வெறும் புதிய அரசியல் கட்சியாக மட்டும் இல்லாமல், அதிமுகவின் வாக்கு வங்கியை கெடுக்கத் தொடங்கியிருக்கிறதா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
காங்கிரஸ்
தமிழக அரசியல் வரலாற்றை பார்த்தால், இதற்கு முன்பே இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 1967-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் திமுக எழுச்சிக்குப் பிறகு காங்கிரஸ் படிப்படியாக தனது அரசியல் ஆதிக்கத்தை இழந்தது. பின்னர் 1972-ல் அதிமுக உருவானதும், மாநில அரசியல் திமுக - அதிமுக என்ற இருமுனைப் போட்டியாக மாறியது. 1977 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைக் கூட மீண்டும் பெற முடியாத நிலை உருவானது.
அதிமுக வாக்கு வங்கி
தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், கூட்டணி அரசியலை மட்டுமே நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோன்ற ஒரு அரசியல் மாற்றம் தற்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. காரணம், தவெக உருவான குறுகிய காலத்திலேயே ஆட்சியை கைப்பற்றியதுடன், அதிமுகவின் முக்கிய தலைவர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. எனினும், அதிமுக இன்னும் கணிசமான வாக்கு வங்கியையும் அமைப்பு பலத்தையும் கொண்டுள்ளது என்பதையும் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுவதும் பரவலான கட்சி கட்டமைப்பு, பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட தொண்டர் படை மற்றும் எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும் அனுபவம் ஆகியவை அதிமுகவின் பலமாக உள்ளன. ஆனால், தொடர்ந்து முக்கிய தலைவர்கள் விலகி செல்வது, கட்சிக்குள் தலைமையான எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி நீடிப்பது, தேர்தல் தோல்விகளின் தாக்கம் ஆகியவை சரி செய்யப்படாவிட்டால், அதிமுக தனது பாரம்பரிய இரண்டாம் இட அந்தஸ்தையும் இழக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தவெகவின் வளர்ச்சி
ஒரு காலத்தில் காங்கிரஸின் இடத்தை அதிமுக பிடித்தது போல, தற்போது அதிமுகவின் அரசியல் இடத்தை தவெக பிடிக்க முயற்சிக்கிறதா என்ற கேள்விக்கு வருங்கால அரசியல் நிகழ்வுகளே பதில் சொல்லும். ஆனால் தற்போதைய சூழலில், தவெகவின் வளர்ச்சியும் அதிமுகவின் உட்கட்சிச் சவால்களும் தமிழக அரசியலில் பல பரபரப்புகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications