ரூ.400 கோடி ஊழல்..அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முளைத்த சிக்கல்! அடுத்த அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு வகிக்கும் மின்சாரத் துறையில் டெண்டர் முறைகேடு மூலமாக 400 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகாரை அதிமுக ஐடி விங் நிர்வாகியான சிடிஆர் நிர்மல்குமார் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
தொடர்ந்து அவருக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும் கோவையின் பொறுப்பு அமைச்சராகவும் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஊழல் புகார் கொடுத்திருக்கிறது அதிமுக. அதிமுக ஐடி வின் பிரிவு பிரிவு நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதாவது மின்சார துறையில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்குவதற்கு 1182 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த டென்டரில் விதிகளுக்கு எதிராக அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், 26,300 ட்ரான்ஸ்பார்மர்களை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில், ஒரே விலைக்கு அத்தனை நிறுவனங்களும் விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக, இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனத்துக்கு 397 கோடி ரூபாய் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி. ஆகையால், செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் லஞ்சம் பெற்றதாக சிறைக்குச் சென்ற செந்தில் பாலாஜிக்கு, தற்போது வகிக்கும் மின்சாரத் துறையிலும் சிக்கல் அதிமுக மூலம் முளைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications