நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் நடந்தால்.. அதுதான் தமிழர்களுக்கு பொங்கல்.. ஜெயக்குமார்!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவா என்று கேள்விக்கு ஜனவரி 16ம் தேதிக்கு பதில் தெரியும் என்று கூறியுள்ள ஜெயக்குமார், 2024ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அதுதான் தமிழர்களுக்கு பொங்கலாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மத்திய சட்ட ஆணையம் ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது.
இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியானது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
அதிமுக சார்பில் சென்னை பாரிமுனையில் மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ஜனவரி 16ம் தேதிக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தை அரசியல் கட்சிகள் சட்ட ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று வரும் போது திமுகவுக்கு கிலி எடுத்துள்ளது.

திமுகவுக்கு அச்சம்
2024 ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் நடந்தால், தமிழர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொங்கலாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தகவல் என்பது கட்சியின் கொள்கை முடிவு. அனைவருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மகிழ்ச்சி என்றால் திமுகவுக்கு மட்டும் அச்சம். அதிமுக தரப்பில் எழுதப்பட்ட கடிதம் பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

திமுகவின் நிலைப்பாடு
தொடர்ந்து குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் பற்றி திமுக புகார் மனு கொடுத்தது பற்றிய கேள்விக்கு, திமுகவிற்கு உடன்பட்டால் ஆளுநர் தேவை. உடன்படவில்லை என்றால் ஆளுநர் தேவை இல்லை. முதலமைச்சர் மகன் பதவிப் பிரமாணத்திற்கு யார் தேவை. அப்பொழுது ஆளுநர் தேவை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் நாற்காலிகளைத் தூக்கிப் போட்டு மைக்கை உடைத்தனர். சட்டமன்றத்தை கேவலப்படுத்தினர். அப்போது ஆட்சியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் சென்றனர். அப்போது அவர்களுக்கு ஆளுநர் வேண்டும் என்று கூறினார்.

ஆளுநர் செயல்பாடுகள்
தொடர்ந்து, ஆளுநரின் சட்டசபை செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி உரை அன்று வேறு எந்த நிகழ்வும் நடத்த கூடாது என்ற அடிப்படை விதி கூட யாருக்கும் தெரியவில்லை. பேரவை தலைவர் இருக்கையில் இல்லாதபோது எந்த தீர்மானத்தையும் கொண்டுவர முடியாது என்ற விதி தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆற்றலில் துளி கூட மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications