ஜெயலலிதாவின் ஆன்மா.. எடப்பாடி உருவத்தில் அதிமுக பொதுக்குழுவை பார்க்கிறது.. புகழ்ந்து தள்ளிய வளர்மதி!
சென்னை: ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் அதிமுக பொதுக்குழுவை கவனித்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் மட்டுமே இருந்தார்கள் என்று கூறிய வளர்மதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகளும், துரோகிகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கேபி முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அதில் வளர்மதி பேசுகையில், காற்று கூட நுழையாமல் கழகத்தை காத்து நிற்கும் காவல் அரண். ஜெயலலிதாவுக்கு பின் புதையலாய் எழுந்த வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இதே மேடையில் ஜெயலலிதா நடந்து வந்ததை எண்ணிப் பார்க்கிறேன். உலகிற்கு தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.
ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் பார்த்து கொண்டிருக்கிறது. நம் அசைவை கவனித்து கொண்டிருக்கிறது.. அம்மா இல்லையென்றால் என்ன.. அண்ணன் இருக்கிறார் என்று தைரியமாக இருக்கிறோம். பெரிய கோவில், தாஜ்மாஹலின் உறுதி நம் கண்களுக்கு தெரியவில்லை.. அதன் அஸ்திவாரத்தை போல் அதிமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் அமரவதற்கு தொண்டர்களே காரணம். அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனும் இந்த கட்சியை சாய்த்துவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் இருந்தார்கள்.. ஆனால் துரோகிகள் இல்லை.. ஆனால் எடப்பாடிக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள்.
அதிமுகவின் துரோகிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிகள்.. தராதரம் தெரியாதவர்கள்.. வரும் தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதி. அதனை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக இப்போதும் போர்க்குணம் கொண்ட புலிதான். புலி இப்போதுதான் வேட்டைக்கு கிளம்பி இருக்கிறது. அது கோட்டைக்கு தான் செல்லும்.. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications