பாஜக சிடி ரவி அட்வைஸ்.. அதிமுக பெருந்தலைகள் கப்சிப்.. ஐடி விங்க் தலைவர்கள் குமுறல்
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தேசிய செயலாளர் ரவியின் கருத்துக்கு அதிமுக ஐடி விங்கில் இருந்து அதிகளவு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தேசிய செயலாளர் ரவியின் கருத்துக்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மேனகா நவநீதன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்ததால் யார் வேட்பாளர், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகள் எழுந்தன. அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருந்தன.

பாஜக தாமதம்
இந்த நிலையில்தான் பாஜக தாமதப்படுத்தியது, அதிமுக காத்திருக்கட்டுமே, எங்களுக்கு கவலை இல்லை என பாஜக மூத்த நிர்வாகி சொன்னது இவற்றை எல்லாம் பார்த்த எடப்பாடி பழனிசாமி தங்கள் தரப்பு வேட்பாளராக கே.எஸ். தென்னரசுவை அறிவித்தார். அது போல் அவருக்கு போட்டியாக ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே வேளையில் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்கள் வேட்பாளர் வாபஸ் பெற்றுக் கொள்வார் என்றும் ஓபிஎஸ் அறிவித்தார்.

கே.எஸ்.தென்னரசு
இந்த நிலையில் நேற்றைய தினம் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. அது திடீரென ரத்தானது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பாஜக செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியையும் , ஓபிஸ்ஸையும் தனித்தனியே சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒன்றிணைக்க பாஜக முயற்சிப்பதாக தெரிகிறது.

சி.டி.ரவி
இந்த நிலையில் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது திமுக எனும் தீயசக்தியை அழிக்க இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை என்றார். இதற்கு அதிமுகவின் எடப்பாடி அணியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஐடி விங்கின் சிங்கை ராமசந்திரன் கூறுகையில் எங்கள் கட்சியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்வதற்கு சி.டி.ரவி யார்.

தேசிய கட்சி
நீங்கள் தேசிய கட்சியாக இருப்பதால் நீங்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும் என ஏதாவது இருக்கிறதா என்ன? கர்நாடகாவில் உள்ள பாஜகவில் நாங்கள் தலையிட்டு அறிவுரைகளை கூறினால் சி.டி.ரவி ஏற்பாரா? திமுகவுக்கு எதிராக எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள் எந்த விதத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?

30 ஆண்டுகள்
ஆனால் அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளது. தீயசக்தி என்றால் என்ன என்பதை நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களா, மேலும் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் ஏன் தொடங்கினார் என்பதையும் எங்களுக்கு நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் எல்லையை தெரிந்து நடந்துக் கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை சத்யன்
அது போல் கோவை சத்யனும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்பதை எடப்பாடியாருக்கு தெரியும் என சிங்கை ராமசந்திரன் போட்ட ட்வீட்டிற்கு பாஜகவின் நிர்மல் குமார் பதில் அளித்தார். அதில் எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? திரு @CTRavi_BJP அவர்கள் கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்திருந்தார்.

பாஜக கிஷோர் சாமி
இதற்கு பாஜகவின் கிஷோர் கே சாமி பதில் அளிக்கையில் எதனால் 2 வாரங்கள் அதே 2017 ம் ஆண்டு ஆளுநர் ஏன் ஓடி ஒளிந்தார் என்பதை விளக்கினால் நலம் . எங்க எம் எல் ஏ கள் இதே சென்னைக்கு வெளியே கூவத்தூரில் தான் இருந்தார்கள் ஆளுநர் தான் மாநிலத்தை விட்டே ஓடினார் என கேள்வி எழுப்பியிருந்தார். கிஷோர் கே சாமியின் ட்வீட்டிற்கு கோவை சத்யன் பதிலளிக்கையில் டெல்லி வழிகாட்டுதல் எனும் பிம்பத்தை தோற்றுவித்தது யார்? இன்றும் பாஜக வேட்பாளர் நிறுத்தினால் எனது வேட்பாளர் வாபஸ் என்று அறிவித்தது யார்? பிரதமர் சொல்லி இணைந்தேன் என்றவர் யார்? பாஜகவின் பகடை அஇஅதிமுக இல்லை. உண்மை உணர்க, தெளிவு பெருக என தெரிவித்துள்ளார்.

போட்ரா வெடிய
இதுகுறித்து சதீஷ் சங்கர் என்ற ஐடி விங் நிர்வாகி கூறுகையில் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடும்.... Dot.. போட்ரா வெடிய என்கிறார். அது போல் இன்னொரு நிர்வாகி ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்யுங்கள். அதை மக்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்
கோவை மனோஜ் என்பவர், அன்று 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் புரட்சித் தலைவருக்கானது. இன்று 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடியாருக்கானது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மாறி மாறி பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் அந்த ட்வீட்டுகளுக்கு நெட்டிசன்களும் பாஜக ஆதரவாளர்களும் கேட்கும் ஒரே கேள்வி அப்படின்னா இரு அணிகளும் எதற்காக போய் அண்ணாமலையை தேடி போய் பார்த்தீர்கள், பாஜகதான் 4 ஆண்டு ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது. அந்த நேரத்தில் எங்கள் ஆட்சியை காப்பாற்றி கொடுக்க பாஜக யாருனு கேட்டு ரோஷப்படுத்திருக்கணும். அப்போலாம் விட்டுட்டு இப்ப வந்து எங்கள் கட்சியில் தலையிட ரவி யார் என கேட்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமூகவலைதளம் முழுக்க இது குறித்த விவாதம்தான் போகிறது.












Click it and Unblock the Notifications