"எடப்பாடியை முதல்வராக்குனது யாருங்க.. நான் சொன்னது தேச விரோத கருத்தா?" - மீண்டும் கொந்தளித்த ஓபிஎஸ்!
சென்னை : சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பது ஒன்றும் தேச விரோத கருத்து அல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை சசிகலாதான் முதல்வர் ஆக்கினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது, உலகித்திற்கே இது தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் சூடாக நடந்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒலித்த ஒற்றைத் தலைமை முழக்கத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் இன்று தந்தி தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு அதிரடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

எதிர்த்து வாக்களித்தோம்
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சசிகலாவோடு அப்போது இருந்ததால் தான் எதிராக வாக்களித்தோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான ஆதரவு இருந்தது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, எங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். ஒரு தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கட்சி செல்லக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தைத் தொடங்கினோம் எனத் தெரிவித்துள்ளார்.

இணைந்தது ஏன்
மேலும், டிடிவி தினகரன் 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் சூழலில்தான், என்னிடம் நிலைமையைச் சொல்லி ஆதரவு கேட்டார்கள். ஸ்டாலின் இதற்கு ஆதரவு கொடுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும். அதைப் பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளித்து இணைந்தோம்.

சசிகலா
மேலும், நான் எங்குமே சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்றுதான் சொல்கிறேன். சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பது ஒன்றும் தேச விரோத கருத்து அல்ல. எடப்பாடி பழனிசாமியை சசிகலாதான் முதல்வர் ஆக்கினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகித்திற்கே இது தெரியும்." என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விட்டுக்கொடுத்தது ஏன்?
மேலும் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் நலன் கருதியே நான் முதலமைச்சர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக்கொடுத்தேன். முடிந்துபோனது முடிந்து போனதுதான். பன்னீர்செல்வம் நியாயமான காரணங்களுக்காக என்றைக்கும் போராடுவான்." எனத் தெரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications