அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் FIR பதியக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக ராஜ்யசபா எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக அமைச்சர் கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாகக் கூறியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கடந்த மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications