அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு தீர்ப்பில் அந்த 2 அம்சங்கள்.. இன்னமும் நம்பும் ஓபிஎஸ் கோஷ்டி!
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 2 அம்சங்கள் இன்னமும் ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கை தரக் கூடியதுதான் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவானது, எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலராக்கியது; ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. சட்டப்படி ஜூலை 11 பொதுக்குழு செல்லும்; அதேநேரத்தில் அப்பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இதனடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோஷ்டியினர் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி குமரேஷ்பாபு இன்று தீர்ப்பு அளித்தார். நீதிபதி அளித்த தீர்ப்பின் சாராம்சம்:
கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது. ஏனென்றால் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே.
பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமித்த தீர்மானங்களும் செல்லும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும்
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கோடியே 55 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், கட்சியை வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பினர், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் தர வேண்டும் என்ற விதி இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதையும் கூட சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது முழுமையாக எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம்.
அதேபோல, ஓபிஎஸ் தரப்பின் தீர்மானத்தை தள்ளுபடி செய்யக் கோரும் வாதம் ஏற்புடையது அல்ல; செல்லாதவை; அர்த்தமற்றவை என்றெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக, . ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும் என சுட்டிக்காட்டி இருக்கிறது. அதாவது எங்களது வாதம் ஏற்புடையது என ஏற்றுக் கொண்டு தடை விதித்தால் ஏற்படக் கூடிய விளைவுகளைத்தான் தீர்ப்பு பேசுகிறது; எங்களது வாதமே தவறு என நிராகரிக்கவில்லை. இதனையும் மேல்முறையீட்டில் சுட்டிக்காட்டுவோம் என்கின்றனர். இந்த 2 அம்சங்கள் அடிப்படையில் அப்பீலில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறது ஓபிஎஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications