ஜெயக்குமார் மீது ஆக்ஷன் தேவை.. சுயநலத்தால் சதி “ஓபிஎஸ்க்கு அந்த திட்டமே இல்ல” கொந்தளித்த செல்வராஜ்!
சென்னை : இரட்டைத் தலைமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒ.பன்னீர்செல்வத்தின் கருத்து என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமையை எந்தத் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமைக்கான ஆலோசனை எங்கும் நடைபெறவில்லை. அது ஜெயக்குமாரின் சொந்தக் கருத்து தான் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது வெளியே தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

ஒற்றைத் தலைமை
எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஒற்றைத் தலைமை பற்றி நடந்த விவாதம் வெளியே கசியக்கூடாது என கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்திக்கையில், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டது என பகிரங்கமாக போட்டு உடைத்தார். பெரும்பான்மையான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்தினர் எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆலோசனை
இதையடுத்து தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்றும், இன்றும் பல கட்டங்களாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எம்.சி.சம்பத், வைத்திலிங்கம், காமராஜ், மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வராஜ்
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒற்றை தலைமைக்கான ஆலோசனை எங்கும் நடைபெறவில்லை. ஒரு சிலரின் சுயநல ஆசைக்காக அவ்வாறு கூறுகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் இல்லை. ஜெயக்குமாரின் சொந்தக் கருத்து தான். இது அதிமுகவின் கருத்து அல்ல. உட்கட்சி விவகாரத்தை ஊடகத்தில் பேசிய ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓபிஎஸ் தான் வழிநடத்துவார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தான் கட்சியை வழிநடத்துவார். இயக்கத்தையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்த இயக்கத்தை காப்பாற்றும் தகுதியும் பொறுப்பும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 25 சதவீதம் பேர் தான் ஒற்றை தலைமை தொடர்பான கோரிக்கை வைத்தனர். இதையும் சிலர் சொல்லித்தான் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

பேச்சுக்கே இடமில்லை
ஒற்றை தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை. தனிப்பட்ட முறையில் யாருடைய கையும் ஓங்குவதற்கு தொண்டர்கள் தயாராக இல்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும். கட்சி வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள். மக்கள் எதிர்க் கட்சியாக நம்மைத்தான் நம்புகிறார்கள் என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications