ஓபிஎஸ் கதையை முடித்து..இபிஎஸ்-ஐ காலி செய்யும் அதிமுக நரி! அடுத்து இவர்தான் டார்கெட்! கேசிபி அட்டாக்
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையனால் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் தலைவர்கள் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் இருக்கும் நரி ஒன்று ஓபிஎஸ்ஸைக் காலி செய்ததாகவும், தற்போது எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றி வருவதாகவும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி போன்றோரைக் காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதாகவும் பதிவிட்டு இருக்கிறார் முன்னாள் எம்பி ஆன கேசி பழனிச்சாமி.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் கட்சிப் பதவியைப் பறித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியைச் சிதைக்க அதிமுகவில் இருக்கும் 'ஒரு சாதி வெறிபிடித்த நரி' திட்டமிட்டு வருவதாக மறைமுகமாகச் சாடி இருக்கிறார் முன்னாள் எம்பி ஆன கேசி பழனிச்சாமி. இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்," அதிமுகவைச் சீர்குலைத்துக் கொண்டு வரும் தந்திரமான நரி! எப்போது அம்பலமாகும்?

சாதிவெறி நரி
அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி அம்மா காலத்தில் "சாதி வெறியன்" என்று முத்திரை குத்தப்பட்டு அமைச்சரவை மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. அந்த நரி அம்மா இருக்கிற வரை முகவரி இல்லாமல் இருந்தது, அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்குகிறேன், கட்சித் தலைவர் ஆக்குகிறேன் என்றெல்லாம் சொல்லி சதி திட்டம் தீட்டி ஓபிஎஸ்ஸை முன்னிறுத்தி முதல் பிளவை உருவாக்கியது, அதில் தன்னை இரண்டாம் இடத்திற்கு உயர்த்திக் கொண்டது.
ஓபிஎஸ் வெளியேற்றம்
அதன்பின் அந்த நரி முக்குலத்து சமுதாயத்தைப் பழிவாங்க முனைப்போடு செயல்பட்டது, இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என்று எல்லாத் தொண்டர்களும் விரும்பிய பொழுதும் நான் அதற்கு முயற்சி எடுத்த பொழுதும் அந்த நரி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது, ஒரு நாள் அந்த நரியைத் தோலுரித்த பின்னர் சில காலம் முடங்கியது. பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைகிற பொழுது முட்டுச்சந்தில் இருந்து தனது சித்து விளையாட்டுக்கள் மூலம் பல சீனியர்களைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முன்னேறியது.
எடப்பாடி பழனிசாமி
இந்த இயக்கம் வலுவோடு விளங்க வேண்டும் என்று நினைத்த பலரையும் தன் சதி திட்டத்தால் பின்னுக்குத் தள்ளியது. என் போன்றோரை கட்சியிலிருந்து நீக்க வைத்தது. தற்பொழுதும் எடப்பாடி பழனிசாமியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போலவும் ஜெயலலிதா அம்மா போலவும் ஆக்கி விடுவேன் என்று ஈபிஎஸ்ஸை உசுப்பேற்றி, செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி, இந்த இயக்கத்தின் ஒற்றுமையைத் தடுத்து, வலிமையைச் சிதைத்துக்கொண்டு இருக்கிறது.
மூத்த தலைவர்கள்
C.V சண்முகம், S.P.வேலுமணி போன்றோரையும் காவு வாங்க காத்துக்கொண்டிருக்கிறது, அதற்கேற்ற சதிவலைகளையும் தீட்டிக்கொண்டிருக்கிறது. அதிகார போதை ஊட்டி ஊட்டி எடப்பாடியைத் தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டு இந்த இயக்கத்தை என்றுமே வெற்றி பெற முடியாத நிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இனம் கண்டு இந்த நரியைத் தோலுரிக்காவிட்டால் 2026 மட்டும் அல்ல எந்தக் காலத்திலும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை ஏற்படும்.
அரசியல் புயல்
இவர் காலத்தில் இந்த இயக்கம் வலுவிழந்தது என்ற தீராத பழிச்சொல்லுக்கு எடப்பாடி ஆளாக நேரிடும். மேலும் எடப்பாடியையும் அமித்ஷாவையும் மோதவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் முடித்துக்கட்ட முனைப்போடு இருக்கிறது அந்த நரி. விஜய் எனும் மாய மானை முன்னிறுத்தி அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முடிவு செய்துள்ளது அந்த நரி." என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு பலரும் ஒரு குறிப்பிட்ட அதிமுக தலைவரின் பெயரை கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications