தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்
சென்னை: அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்த இசக்கி சுப்பையா, ஜெயக்குமார்,சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதி.மு.க எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அவர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த கோரியும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அந்த ரிட் மனு விசாரணையின் போது தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா, பெருந்துறை தொகுதியின் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் சத்தியபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதியின் மரகதம் குமரவேல் ஆகியோர் சமீபத்தில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நால்வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம்
இந்த நிலையில், அவர்களின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நான்கு முன்னாள் எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமா மற்றும் கட்சித் தாவலுக்குப் பின்னால் அரசியல் குதிரைப் பேரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சிபிஐ விசாரணை
அதோடு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி, வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்த நால்வரும் போட்டியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரக்கூடிய சூழலில், முன்னாள் எம்எல்ஏக்கள் நால்வரும் சட்ட ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இசக்கி சுப்பையா
அதன்படி, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கூட்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மூலம், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தையும், சட்ட வாதங்களையும் கேட்காமல் நீதிமன்றம் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேவியட் மனு என்பது ஒருதரப்புக்கு எதிராக உடனடி உத்தரவு பிறப்பிக்கப்படுவதைத் தடுக்க பயன்படும் முக்கியமான சட்டப் பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கேவியட் மனு
இந்த நால்வரின் ராஜினாமாவால் அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே, இந்த நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அண்மையில் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications