களத்தில் விஜய் வலிமையை தாமதமாக உணர்ந்து கொண்ட அதிமுக.. சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி!
சென்னை: தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், அதிமுக அதனை தாமதமாக உணர்ந்து கொண்டதாக பார்க்கப்படுகிறது. திமுகவை வீழ்த்த தவெகவின் கூட்டணி அவசியம் என்ற நிலை உருவாகி இருப்பதை அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே, விஜய்யை தொடர்ந்து கூட்டணிக்கு அழைப்பதன் பின்னுள்ள காரணம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாள் முதலே, அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் இது வெற்றிக் கூட்டணி என்று கூறி வந்தாலும், அது களத்தில் எதிரொலிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின் போது கூட இதனை நிர்வாகிகள் கண்கூடாக அறிந்து கொண்டனர்.

குறிப்பாக தென் மாவட்டங்களில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வருவதை திமுக முன்பாகவே உணர்ந்து கொண்டது. அதற்கேற்ப இளைஞரணியில் பல்வேறு கூட்டங்களை நடத்தி, புதிய நிர்வாகிகளை கொண்டு வந்தது. ஆனால் அதிமுக இளைஞர்களை கவர்வதற்கு எந்தவித நடவடிக்கையையும் தீவிரமாக எடுக்கவில்லை.
இதனால் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பக்கம் இளைஞர்கள் சாயத் தொடங்கினர். மதுரை மாநாட்டிற்கு பின் விஜய்யின் ஆதரவை பார்த்து அதிமுக கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் விஜய்யை கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆர்பி உதயகுமார் நேரடியாக விஜய் அதிமுகவின் கூட்டணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒருவேளை விஜய் தனித்துப் போட்டியிட்டால் இளைஞர்கள், முதல் தலைமுறையினர் வாக்குகள், பெண்கள் மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிடும். இதனை அதிமுக தாமதமாக உணர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2006ல் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு சுமார் 8 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதனால் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததோடு, திமுகவும் மைனாரிட்டி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. திமுக இதனை உணர்ந்து கொண்டு விஜய்யின் செல்வாக்கையும், இமேஜையும் அட்டாக் செய்து வருகிறது.
ஆனால் அதிமுகவோ விஜய்யின் இமேஜை உயர்த்திக் கொண்டே செல்கிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும், எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய சிக்கலை சந்திப்பார். பாஜகவுடன் இருக்கும் அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால், அது விஜய்யின் அரசியல் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்துவிடும். இதனால் விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications