எடப்பாடி கூட்டத்தில் அதிகரித்த தவெக கொடி.. தலைமறைவான தலைமை.. மாவட்டச் செயலாளர்களும் கப்சிப்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பிரச்சார கூட்டங்களில் தவெகவின் கொடி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக விரும்புவது போல் ஒரு கருத்து உருவாகி வரும் சூழலில், இதுகுறித்து தவெக தலைமையோ, மாவட்டச் செயலாளர்களோ எந்த கருத்தையும் கூறாமல் அமைதி காத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி விக்கிரவாண்டி மாநாட்டை நடத்திய நாள் முதலே, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்பி வருகிறது. அதற்கேற்றபடி தவெக தலைவர் விஜய்யும் அதிமுகவின் தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொண்டாடி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கூட மேடம் என்றே விஜய் அழைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவை தொடக்கம் முதலே பெரியளவில் விஜய் விமர்சிக்கவில்லை. அப்போது விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் சந்திப்பு பயணம் தொடங்கிய பின், நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். ஆனால் கரூரில் ஏற்பட்ட கொடூர சம்பவம் தவெகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
அந்த நேரத்தில் தவெக மற்றும் விஜய் ஆகியோரை விமர்சிக்காமல் அதிமுக மற்றும் பாஜக அமைதி காத்தது. மொத்தமாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுக் குரல் தவெக தொண்டர்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று பேசினார்.
அதேபோல் அதிமுக மாபெரும் கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்து வருகிறார். தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி மாபெரும் கூட்டணி என்று பேசியது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் நாளுக்கு நாள் தவெக கொடி அதிகமாக தென்பட தொடங்கி இருக்கிறது.
ஆனால் தவெக தரப்பில் இருந்து இதற்கு எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒருமுறை அண்ணாமலை மேற்கொண்ட யாத்திரையில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட போது, உடனடியாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது தவெக தலைமையில் உள்ளவர்கள் அனைவருமே தலைமறைவாகி இருக்கின்றனர்.
தவெக மாவட்டச் செயலாளர்களும் அமைதி காத்து வருகின்றனர். இதுவே வேறு ஒரு அரசியல் கட்சியின் கொடி பிரதான எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கட்சியின் கூட்டத்தில் காட்டப்பட்டிருந்தால், நிச்சயமாக விளக்கமோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட்டிருக்கும். இதனால் தவெக தரப்பில் இன்னும் கட்டமைப்பு சரியாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications