1030150000000 ரூபாய் வேண்டும்.. இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி! தமிழ்நாடு தாங்குமா?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க. அறிவித்துள்ள நலத்திட்டங்களை நிறைவேற்ற சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான செலவை மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை சாத்தியப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் மக்கள் நலத் திட்டங்கள் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. ஏற்கனவே ஆட்சியில் உள்ள திமுக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு ஒருமுறை ரூ.5 ஆயிரம் வழங்கியது.
மேலும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், தற்போது எதிர்க் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிதி உதவிகள் மற்றும் மானியங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.

தமிழக நிதி பற்றாக்குறை
தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் படி, இந்த நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 271 கோடியாகவும் உள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரத்து 696 கோடியாக உள்ளது. மேலும் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்தக் கடன் 2027 மார்ச் மாதத்திற்குள் ரூ.10 லட்சம் கோடியாக உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் வட்டி செலவினம் ரூ.78 ஆயிரத்து 677 கோடி ஆகும்.
அதிமுக நலத்திட்ட செலவு
இந்நிலையில், அ.தி.மு.க. அறிவித்துள்ள நிதி உதவித் திட்டங்களை மட்டும் செயல்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.1.03 லட்சம் கோடி கூடுதல் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக கல்விக் கடன் ரத்து, நெசவாளர்களுக்கு மின் மானியம் உயர்வு போன்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகள்
அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மாதாந்திர உதவித் தொகைகள், ஓய்வூதிய உயர்வு, மாணவர்களுக்கு உதவித்தொகை, இலவச சிலிண்டர் வழங்கல், மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம், போக்குவரத்து மானியம், இருசக்கர வாகன மானியம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டங்களுக்கு பல கோடி குடும்பங்கள் மற்றும் இலட்சக்கணக்கான பயனாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
மானிய திட்ட செலவு
அதன்படி தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் திட்டங்களை படி குலவிளக்கு திட்டம், கருணைத்தொகை 10,000, ஓய்வூதிய உயர்வு, மூன்று இலவச சிலிண்டர்கள், பட்டதாரி உதவித்தொகை, பிளஸ் டூ மாணவர்களுக்கு உதவித்தொகை, பொங்கல் பரிசுத்தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரணம், ஆண்களுக்கான இலவச பேருந்து இருசக்கர வாகன மானியம் ஆகியவற்றிற்காக 53 ஆயிரத்து 520 கோடியிலிருந்து - 240 கோடி ரூபாய் வரை 10 திட்டங்களுக்கும் செலவாகிறது.
தமிழக பொருளாதாரம்
அந்த வகையில் பார்க்கும்போது ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 15 கோடி ரூபாய் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் தற்போதைய வருவாய் மற்றும் செலவின நிலையை கருத்தில் கொண்டால், இந்த அளவிலான கூடுதல் நிதியை அரசு எப்படி ஏற்பாடு செய்யும் என்பது முக்கிய விவாதமாக உள்ளது.
நலத்திட்ட நிதி சவால்
வருவாய் உயர்த்தும் நடவடிக்கைகள், வரி வசூல் அதிகரிப்பு, செலவின முன்னுரிமை மாற்றம் போன்ற வழிகள் குறித்து பல தரப்புகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. மாநில நிதிநிலை ஒருபுறம், அதிகரித்து வரும் கடன் மற்றும் வட்டி செலவினம் மறுபுறம் இருக்கும் நிலையில், பெரிய அளவிலான நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது எப்படி நடைமுறைக்கு வரும் என்பது அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.












Click it and Unblock the Notifications